புதன், 23 அக்டோபர், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-3)

முதல் பகுதி படிக்க
இரண்டாம் பகுதி படிக்க

நீண்ட இடைவெளியாகிவிட்டதிற்கு மன்னிக்கவும். ஆபிசில் ஆணியும் ஜாஸ்தி, வீட்டில் அடியும் ஜாஸ்தி... மிடில.... இப்பகுதியை தொடங்கும்முன், என்னை மீண்டும் எழுதத் தூண்டிய நம்ம தல ஹாலிவுட் பாலா அவர்களுக்கும் மன்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நீ எழுதலைன்னு எவன் கேட்டான் என்று கும்ம விரும்புவர்கள், இவர்களை அழைக்கலாம் :) இனி விட்ட இடத்தில் இருந்து தொடருவோம்,ஆல் நட்பூஸ். முந்தய பகுதியை படித்துவிட்டு தொடருங்கள் :)

’டொமேட்டோ நாசிக்கந்தர்’ ஹோட்டலின் சிறப்பு ’ரொட்டி டிஸ்யூ’ என்ற ஐட்டம். நம்ம வீச்சு புரோட்டாவை அப்பளம் கணக்காக செய்து, நம்ம ஊர்ல ரோஸ்ட் கொடுப்பாங்கல அதுபோல கூம்பு (cone) வடிவாகச் சுற்றி, அதன் மேல் சர்க்கரை பாகு ஊற்றித் தருகிறார்கள்.. இங்கு வரும் எல்லா வெளிநாட்டவர்களும் சாப்பிடும் முதல் ஐட்டம் இதுவாகத்தான் இருந்தது. எவரைப் பார்த்தாலும் இதுதான் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். அதன்காரணமாகவே அவிங்க டேபிலில் இருக்கும் ஐட்டம் எனக்கும் ஒன்னு வேணும் என ஆர்டர் செய்தேன். சுவை வித்தியாசமா இருக்கும்... செம்ம Crispy. செம்ம டேஸ்ட். எதுவுமே விரும்பி சாப்பிடாத யோகவ், சத்தமே இல்லாமல் உண்டான். இதன் சுவைக்கு  அதுவே சான்று.

Roti Tissue
ஒரு சிறிய தகவல் - அடுத்த நாள் பயணத் திட்டமாக Island Hopping Tour மற்றும் பைக்கில் பிற இடங்களைக் காண என முடிவு செய்தோம். நாங்கள் ஹோட்டலில் சாப்பிடும்போதே 'Island Hopping Tour'க்காக முன்பதிவு செய்துக்கொண்டோம். இங்கு வேலை பார்க்கும் சர்வர்களின் சைட் பிசினஸ், சாப்பிட வரும் டூரிஸ்ட்களுக்கு சுற்றிக் காட்ட ஏற்பாடு செய்வதே. (அதாவது நம்மளை ஏதாவது ஒரு டூரிஸ்ட் ஆப்பரேட்டர்களிடம் கோர்த்து விடுவது.) ஒரு ஆளுக்கு 30 வெள்ளி என Sharing Basis ல் பேரம் பேசி முடிவானது.

வகுரு நிரம்பியவுடன், மனதில் தெம்பு தானாகவே கூட மீண்டும் ஒரு சிறிய ரைட், இம்முறை புத்திசாலித்தனமாக தெரு விளக்கின் வெளிச்சம் இருக்கும் வரை மட்டும் வண்டியை விட்டோம். அருகில் ஒரு ஷாப்பிங் மாலை கண்டவுடன் அதில் உள்ளே சென்று ஒரு நோட்டம் பார்க்க சென்றோம். வியக்கும் விதமாக பெரிதாக ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் மாலே இல்லை, ஒரு சிறிய காம்பிலக்‌ஷ் என்று தான் சொல்ல வேண்டும். இதை ஊரின் பெரிய மால் என்று வேறு தகவல் சொன்னார்கள். :) :) :)


இப்படியே மணி இரவு பத்தை தாண்ட, பயணக் களைப்பு ஒருபுறமும், அடுத்த நாள் காலை 7 மணிக்கே வண்டி வரும் என்ற எண்ணமும் திகில் கிளப்ப நடையை கட்டினோம் ஹோட்டலுக்கு. சிறிது நேரத்திலேயே என் மனைவியும் குழந்தையும் நல்லா தூங்கிட்டாங்க. எனக்கு அவ்வளவு களைப்பிலும் தூக்கமே இல்ல. காரணம், தங்கியிருந்த ரூமும், பைக்கும்.
இது ரிசார்ட் போல இருப்பதால், பைக்கை வீட்டின் முன்பே நிறுத்திக்கொண்டேன்.

(முன்குறிப்பு - நான் மலேசியா செல்கிறேன் என்றவுடன் என் நண்பர்கள் ஆளாளுக்கு ஒரு மலேசியா திகில் திருட்டுக் கதை சொன்னார்கள். ரொம்ப ஜாக்கிரதை, ரோட்டிலேயே திருட்டு கும்பல் ஜாஸ்தி, நடைபாதையில் நடக்கும்போதே மிரட்டி பணம் பறிப்பார்கள் எனவும், உடைமைகள் அனைத்தின் மேல் அதீத கவனம் தேவை எனவும் பலவாறு எச்சரிக்கைகள். போதாக்குறைக்கு மலேசியாவில் சந்தித்த தமிழும் தன் பங்கிற்கு ரெண்டு எச்சரிக்கை ஏவுகணைகள் வீசினார். அதுவரை, நான் ஏற்கனவே சென்ற இடம் என்ற மமதையில் அப்படி ஒன்னும் இருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்தி வைத்திருந்தேன். இப்பத்தான் ஜர்க்கானேன், மலேசியா குடிமகனே இப்படி சொல்கிறாரே என்று.)

இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி தூக்கம் வரும். நம்ம வாடகை வண்டி வேற அநாதையா வாசலில் இருக்கு. திருட்டு போயிடுமோ? நம்ம ரூமை யாராவது களவாட வந்தால் என்ன செய்வது, ரூமில் இண்டர்காமும் இல்லை. இந்த ரிசார்ட் வேற விலாசமா இருக்கே !!! அவசரத்துக்கு யாரை கூப்பிட....!!! ச்சே, ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கலாம் என என்னை நானே நொந்துக் கொண்டேன். இதன் காரணமாவே தூக்கம் வெகுநேரம் வரவில்லை. தூங்கிய சிறிதுநேரமும், வெடுக் வெடுக்கென்று முழித்து ஜன்னல் வழியா வண்டியையும், யாராவது நடமாட்டம் இருக்கிறதா? என்றும் பார்த்துக்கொள்வேன்.

ஐலேண்ட் ஹோப்பிங் டூர் என்பது, லங்காவியை சுற்றியுள்ள சின்னஞ்சிறு தீவுகளை சுற்றிப் பார்ப்பது, மொத்தம் 5 மணி நேரம். காலை 8 மணிக்கெல்லாம் மோட்டார் படகு கிளம்பிவிடும், ஆகையால் 7.15 மணிக்கு வண்டி பிக்-அப் என்றான் அந்த ஆர்கனைசராக மாறிப்போன சர்வர் :)

விடியற்காலை எழுந்து தயாராகிவிட்டு, யோகவை எழுப்பினால் அசரவில்லை. அவனை உலுக்கியெடுத்து, எல்லோரும் ஒருவழியாக   யூத்தாகி டொமேட்டோ நாசிக்கந்தர் முன்பு பிக்-அப் வண்டிக்காக Punctuality புலியாக 7.00 மணிக்கே போய் நின்றோம். படிக்கும் காலத்தில் கூட இவ்வளவு ஷார்பாக பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்றது இல்லை, அவ்வளவு ஏன்?, துபாயில் ஒரு நாள் கூட வேலைக்கு காலை 8 மணிக்கு முன்பாக ஆஜரானதில்லை. அம்புட்டு ஆர்வம்.

யோகவின் சோர்வை நீக்க ப்ரட் ஆம்லேட் ஊட்டிவிட்டு அழைத்துச் செல்லலாம் என்று அருகில் இருக்கும் கடையில் நுழைந்தோம். மிகுந்த சோர்வில் எதுவும் உண்ணாமல், தண்ணிர் மட்டும் போதும் என்று பிடிவாதமாக நின்றான். எங்களுக்கு இப்பவே பீதியானது. முதல் நாளே பையன் இப்படி சுருண்டுட்டான் என்று. இனி, எப்படி மீதி 11 நாட்களை கடத்துவது, எல்லாம் Collapse என்று பல்வேறு சிந்தனை.

சுமார் 8.30 மணிக்கு தான் பிக்-அப் வேன் எங்களை அழைத்துக்கொண்டு ஹார்பருக்கு சென்றது. அங்கு எங்க சகப்பயணியாக, சவுதியில் பணிபுரியும் ஒரு மலையாள தம்பதியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும், ஒரு மலேசிய தமிழ் ஹனிமூன் தம்பதியினரும் இணைந்தார்கள்.

 நம் சட்டையில் ஒட்டிக்கொள்ள எல்லோருக்கும் தலா ஒரு ஸ்டிக்கர் கொடுத்தார்கள், எதற்கென்றால் படகு ஓட்டுபவர்  நம்மை அடையாளம் கண்டுக் கொள்ளவாம். படகு ஏறியவுடன் தானாகவே ஒரு விதமான சந்தோசம் ஆட்கொள்கிறது. படகு வேகத்தில் செல்ல செல்ல பச்சை நிறமும் ப்ளு நிறமும் கலந்த கடல்நீரும், குளிர்காற்றும், தெறிக்கும் கடல்நீரும் மனதை குதூகல ஆட்டம் போட வைக்கிறது. இரண்டு நாள் தூக்கமின்மையாலும், பயண சோர்வாலும் யோகவ் மிகவும் சோர்ந்து எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தான்.


கடலின் நடுவே சின்னஞ்சிறு குன்றுகள் போல பசுமையான மரங்கள் நிறைந்த காடும், கடலும் ரம்மியமாக காணக்கிடைத்தன. படகு ஓட்டுபவரே டூரிஸ்ட் கைடாக டவுள் ஆக்ட். மோட்டார் படகுப் பயணம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் படகை நிறுத்தி ஒரு மலைக்குன்றை காண்பித்து Pregnant Island என்று கூறினார். என்னவென்றே புரியாமல் மீண்டும் உற்று நோக்கினால், அந்த மலை மேடுகளை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஒரு நிறைமாத கர்ப்பிணி படுத்த நிலையில் இருப்பது போன்று காட்சியளிக்கிறது.


கூகுலாண்டவர் உதவியால், உங்க பார்வைக்கு
அடுத்து பயணித்தது Dayang Bunting Geoforest Park என்ற இடத்திற்கு. இதன் சிறப்பம்சம், கடல் நடுவே இயற்கையாக உருவான மிகப்பெரிய குளம். பல ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கடியில் இருந்த சுண்ணாம்பு கற்கள் நிறைந்த குகை வெடித்து சிதறியதால்  உருவான குளம் என கூறினார் என்னுடன் வந்த மலேசிய தமிழர். மேலும் இக்குளத்தை lake of the Pregnant Maiden' என்றும் அறியப்படுகிறது என விவரித்தார். ஒரு பழங்கதையும் உண்டாம். இக்குளத்தில் குளித்தால், விரைவில் கர்ப்பமாவோம் என்ற நம்பிக்கையும் இருப்பதாக அறிந்தேன். :) :) :)

நிறைய படத்தில் பார்த்த இடம் (Dayang Bunting Geoforest Park)
இத்தீவிற்குள் படகு நின்றவுடன், ஒரு மணி நேரத்தில் திரும்ப வர வேண்டும் என வாய்மொழி உத்தரவு. படகு கரை ஒதுங்கும் போதே, எங்களை வரவேற்ற முதல் வேற யாரு? நம்ம குரங்குகள் தான். குரங்குகளின் சேட்டை முன்பே அறிவேன், ஆதலால் பிளாஸ்டிக் பொருள், கவர் எதுவும் இல்லாத வண்ணம் பயணப்படக் கூறியிருந்தேன் என் மனைவியிடம்.   இருந்தும் குரங்கை கண்டதும் பதற்றத்தில், தன் கைப்பையையும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் அனைவரின் பாஸ்போர்ட் என் 3/4th பேண்டின் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். கேமராவை பாதுகாப்பது தான் என்னுடைய முதல் குறிக்கோள்.

இத்தீவில் நிறைய சினிமா பாடல் காட்சிகளை எடுத்துள்ளார்கள். மேலே இருக்கும் படத்தை பாருங்கள்.

என்னுடன் வந்த மலையாளிகளையும் எச்சரித்தேன். கையில் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று. நான் எடுத்துக்கூறியும், கவனக் குறைவால் அந்த மலையாளி குடும்பத்தின் குழந்தையிடம் கேமரா இருந்தது. தரை இறங்கியதும் இதற்காகவே காத்திருந்த ஒரு குரங்கு அதை அபேஸ் செய்தது. விலையுயர்ந்த கேமரா போச்ச்ச்....

ஒரு சில குரங்கு என்றால் சமாளிக்க்லாம், அது அங்கு ராஜாங்கமே நடத்துது, நாம பம்மித்தான் போக வேண்டும். நிறைய குழந்தைகளின் சாக்லேட், பிஸ்கட், பாலிதின் கவர்கள் என அனைத்தும் பறிபோயிக்கொண்டே இருந்தது. செம்ம த்ரில் தான். நாங்கள் லாவகமாக முன்னேறினோம். யோகவ் நிற்கவே மாட்டிறான், ஆகையால் அவனை தூக்கிக்கொண்டும், என் மனைவி என் பின்னால் பதுங்கியும் மெல்ல மெல்ல தீவினுள் சென்றோம்.சிறிய சிறிய படிகட்டுகள் என போகப்போக செங்குத்தாக மலை ஏற வேண்டும். இதில் யோகவை தூக்கிக் கொண்டும் சென்றதால் நாக்கு தள்ளிருச்சு.


அவ்வளவு சிரமம் கடந்து சென்றால், வாவ் வாவ் வாவ்..!! மிக மிக செழுமையான ஒரு இடம். அனைத்து பகுதியும் மலையால் சூழ்ந்த ஒரு இயற்கையான குளம். கண்கொள்ளாக் காட்சி.
Pregnant Maiden Lake

இன்னும் நிறைய இருக்கு. பதிவு நீள்வதால் ஒரு சிறிய இடைவெளிவிட்டு நாளை தொடர்கிறேன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக