புதன், 4 செப்டம்பர், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-2)

முதல் பகுதி படிக்க


மலேசியாவில் முதல் நாள்

நான் தமிழுடன் சிரித்துப் பேசுகையில் அடிக்கடி திரும்பித் திரும்பிப் பார்த்தார், யாரோ இவரை அடிக்க வருவதைப்போல ஒரு லுக்கில். ஒரு வேளை இவர் மலேசியா தாதாவோ??? என்று கூட யோசித்தேன். எதற்காக இப்படி பார்க்கிறார் என்று முதலில் புரியாமல் இருந்தது. அப்பாளிக்கா தான் நம்ம மண்டைக்கு உறைத்தது, அட ஹரிப்பயலே, நீ சிரிக்க ஆரம்பித்தால் ஊரே திரும்பிப் பார்க்கும்படியான சத்தம் வருமே, அதைக் கண்டுதான் மனுஷன் பீதியில் இருக்கார் என்று. பின்பு மனதைத் தேற்றிக்கொண்டு சகஜமாகப் பேசினார்; பழக்கப்பட்டுவிட்டார். வேற வழி :)  ஒரு வழியாகச் சிரித்து முடித்து உள்ளூர் விமான நிலையம் போய்ச் சேரும் போது செக்-இன் கவுண்டர் மூடும் நேரமாகிவிட்டது.

அடித்துப் பிடித்து சினிமா தியேட்டருக்கு ஓடி, முட்டிமோதி ஒரு வழியாக டிக்கெட் வாங்கியவுடன் தான் நமக்கு சுயநினைவு வரும். நம்ம பொருள், உடனிருப்பவர் இருக்கிறார்களா என்று பார்ப்போமே, அதே நிலை தான்.
ஈ-டிக்கெட் எடுத்தவுடன் பார்க்கையில் கையை பிடித்துக்கொண்டிருந்தப் பையனைக் காணவில்லை.

எங்கு தேடுவது இவனை? எங்கு போயிருப்பான்? வேற விமான நுழைவாயில் சென்றுவிட்டால் என்னாவது? நம்மவூட்டு அம்மணிக்கிட்ட மாத்து யார் வாங்குவது? நம்ம மொபைல் நம்பரும் யோகவ்க்கு தெரியாதே?. இது துபாய் போல கிடையாதே, தைரியமாக இருக்க என மனதில் ஓராயிரம் கேள்விகள்... (துபாயில் 3-4 முறை காணாமல் போயுள்ளான், அதனால் முதற்வேலையாக எங்களின் மொபைல் நம்பரை மனப்பாடமாக சொல்லிக் கொடுத்துவிட்டோம். ஒரு வேளை யோகவ் காணமற்போனால், அருகில் இருக்கும் யாருடனும் சென்று அவர்களின் மொபைலில் எங்களை அழைக்கலாம் என்று கற்றுக் கொடுத்துள்ளோம்)

ஒரு சில மணித்துளியில் வயிற்றில் பாலை வார்த்தார் நண்பர் தமிழ். யோகவ் உள்ளே சென்று உங்க அம்மணிக்கிட்டத்தான் நிற்கிறான் பாருங்க என்று. இங்கே ஒரு குறிப்பு - மலேசியாவில் ஏர்-ஏசியா விமான சேவைக்காகவே ஒரு விமான நிலையம் இருக்கிறது என நினைக்கிறேன், எங்கு பார்த்தாலும் ஏர்-ஏசியா விமானமும், ஜேஜேவென்று மக்கள் கூட்டமும் காணலாம். அம்புட்டுச் சலீச்சான விமான டிக்கெட் ஏர்-ஏசியாவில்.

கோலாலம்பூர் - லங்காவி தீவிற்கு செல்ல 60 திர்ஹாம்ஸ் தான் (ஒரு வழி மட்டும்). சுமார் ஒரு மணி நேர பயணத் தூரம். லங்காவி என்பது மலேசியாவின் மிகப் பிரபலமான சுற்றுலா தீவு. இது பூலோகச் சொர்க்கம் என்று அடிச்சு சொல்லலாம். நான் முன்பதிவு செய்த ஹோட்டலின் பெயர் அடினா-இன், இது பெண்டாய் செனாங் (Pentai Cenang) என்ற கடற்கரை ஓரம் அமைந்த பரபரப்பான பகுதி. நிறைய விடுதிகள், ரிஸார்ட்கள், உணவகங்கள், கடற்கரை, சுற்றுலா  ஸ்தலங்கள் என இருக்கும் இடம்.நாங்கள் லங்காவியில் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இலவசமாக லங்காவி ரோட் மேப் மற்றும் இன்னபிற டூரிஸ்ட் விளம்பரங்கள் தந்தார்கள். (நாம் பினாயில் ஓசி என்றாலே விடமாட்டோம்.  இதை விட்டிருவோமா என்ன..!!!) லங்காவி விமான நிலையத்திலேயே Pre-Paid taxi சர்வீசில் ஹோட்டலுக்கு செல்ல டாக்‌சிக்கான பணத்தைக்  கட்டிவிட்டு, அவர்களிடம் இங்கு வாடகைக்கு கார், டூ வீலர் கிடைக்குமா என விசாரித்தேன். நான் தங்கும் ஹோட்டல் வாசலின் முன்பே இருக்கிறது என்றார்கள்.... அடடே...!!

Hotel Adina-Inn

 ஹோட்டல் கிட்டதட்ட ரிஸார்ட் ஸ்டைலில் இருந்தது. நம் அறையின் முன்பே வாகனத்தை நிறுத்தும் வசதி, ரம்யமான சூழல், இரண்டு டபுள் காட் மெத்தைகளுடன் விசாலமான அறை, இரண்டு நிமிடத்தில் கடற்கரை என அருமையான இடம். ஒரு நாள் அறைக்கான வாடகை 125 வெள்ளிகள். ஒரே ஒரு குறை பின்பு விரிவாக சொல்கிறேன்.
எங்க அம்மணி, பயணக்களைப்பில் உறங்க வேண்டும் என்று அரங்கநாதர் அவதாரம் எடுத்துவிட்டார். நம்ம வாரிசோ, புது இடம் என்பதால், கேள்வி மேல் கேள்விகள்... பீச் எங்கே, இது எந்த இடம்? இனிமேல் நம்ம புது வீடு இதுதானா? மேலும் நிறைய சேட்டைகள். என் முகக் கண்ணாடியை போட்டுக்கொண்டு என்னைப் போல பாவனைச் செய்வது, விதவிதமாகத் தன்னை போட்டோ எடுக்கச் சொல்லி அதகளம் பண்ணிட்டான். வகுறு பகபகவென அலாரம் அடித்ததால் அருகில் இருக்கும் உணவகத்தில் சாப்பிடப் போகலாம் என இருவரும் தமிழ் உணவகமான 'Tomato Nasi Kandar'க்கு சென்றோம். (நான் முன்பே சென்றுள்ளதால் இந்த உணவகத்தின் சுவைப் பற்றி அறிவேன், அதனால் தான் என் தங்கும் இடத்தை இங்கு தேர்வு செய்தேன், ஆயிரம்தான் இருந்தாலும், நமக்கு சோறு தானே முக்கியம்... :) )

என்னைப் போல பாவணை செய்கையில்
குஷி மூடில்
சாப்பிட்டவுடன் அருகில் இருக்கும் கடற்கரையை யோகவ் பார்த்த அதே நேரத்தில், நான் பைக் வாடகைக்கு விடும் கடையை கண்டுவிட்டேன். கடற்கரைக்கு  சென்றதால் ஏகக் குஷியாகி விட்டான். பின்பு எங்க அம்மணியையும் அழைத்துக் கொண்டு சென்று பீச்சில் செம்ம ஆட்டம். 1 மணி மேலாகியும் திரும்பவர மறுத்தான். அவனைச் சமாதானப்படுத்தி பைக் வாங்கலாம் வா என அழைத்துகொண்டு போனோம், தொப்பர தொப்பர நனைந்துக்கொண்டு.

ஒரு நாள் வாடகையாக 25,30,35 வெள்ளி என்றவுடன் எனக்கு ஆச்சர்யம். 25 என்றால் 20,000 கிமீ ஓடியது;  30 வெள்ளிக்கு 10,000 கிமீ.க்கு குறைவான ஓடியது; 35 வெள்ளியென்றால் புத்தம் புதிய வண்டி. யோகவ் ப்ளு கலர் வண்டிதான் வேண்டும் என தீர்மானித்தான். வெறும் 300கிமீ ஓடிய புத்தம் புதிய TVS Scooty போல இருக்கும், ஆனால் செம்ம பிக்-அப் 125CC.

எங்களுக்கு 4 நாட்கள் வண்டி தேவைப்பட்டது. அதற்கு வாடகைப் பணத்தை முன்பே கட்ட வேண்டும் + 50 வெள்ளி வைப்புத்தொகை. வண்டி பன்சரானோலோ, பழுதடைந்தாலோ அழைப்பின் பெயரில் அந்த இடத்திற்கே வந்து மற்றொரு வண்டியை மாற்றித் தருவதாகக் கூறினான்.சும்மா சொல்லக்கூடாது, அட்டகாசமான வண்டி. அதே சமயம், எல்லோருக்கும் தலைக்கவசம் - குழந்தை உட்பட. மூன்று பேரும் ஹெல்மட் அணிந்திக்கொண்டு பயணம் செய்தது ஒரு சுவையான அனுபவமாக இருந்தது.

இது சும்மா போட்டாக்காக, ஹெல்மட் இல்லாமல்
கடைக்காரனே மிகத்தெளிவான சாலையின் வரைப்படம், பார்க்க வேண்டிய இடங்கள், மேலோட்டமாக போகவேண்டிய ஊரின் வழித்தடம் பற்றிய தகவல் குறிப்பு தந்தான். ஒரு Ride போகலாம் என்று வண்டிய விட்டோம், உடனே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளுமாறு கட்டளையிட்டான் .சரியென்று வரைப்படத்தை வைத்து ஓட்ட துவங்கினேன்.

பெரிதாக அவ்வூர் சாலைகள் பற்றி தெரியாது, ஊர்ப்பற்றி தெரியாது, மக்களைப் பற்றி தெரியாது.அங்கு இங்கு என அழைந்து பெட்ரோல் பங்’கை கண்டுப்பிடிப்பதற்கே தாவு தீர்ந்தது. இத்தனைக்கும் ஒரு 5கிமீ தான் பயணித்தோம். சரி, பெட்ரோல்  தான் நிரப்பியாச்சே என்ற மமதையில் ஒரு ரௌண்ட் போகலாம் என சுமார் 15 கிமீ இருக்கும் 'Kuah' என்ற நகரப்பகுதிக்கு வண்டியை  கிளப்பினோம்.

போகும் வழியில் ஒத்த ஆள் கிடையாது, இதில் வண்டிய விரைவாக ஓட்டவும் முடியாத நிலை. எங்க அம்மணி வழிகாட்டுதலில் தான் வண்டியை ஓட்டனும். (அவங்ககிட்ட தான் வரைப்படமே, நான் முதலில் குத்துமதிப்பாக பார்த்துக்கொண்டு  கிளப்பிடுவேன்). சிறிது நேரம் கடக்கையில் இருள் சூழச்சூழ அய்யகோ, நம்மளை திருட்டு கும்பல் தாக்கினால் என்ன செய்வது என்ற பீதியால் வண்டியை நிறுத்தினேன். நடுவில் நிறுத்தி வரைப்படத்தை பார்த்து மாற்று வழியில் எங்க ஹோட்டலுக்கு வண்டியை திருப்பினேன். அவ்வாறாக முதல் பிளானே அப்பளமா நொறுங்கிடுச்சு :) :) :)

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மண்ட் வீக் என்பது கணக்கா வெளியே ஒன்னும் காட்டிக்கொள்ளாமல் வண்டியை ஓட்டினால், அது இன்னும் டெர்ரர் பாதையாக இருக்கு. ஈ காக்கா கூட இல்ல... !! நம்மளை அடிச்சு துவச்சு போட்டாலே நம்ம பாடியை தூக்க ரெண்டு நாள் கழிச்சு தான் வருவாங்க போல. ஒரு விதமான பயம் தொற்றிக்கொண்டது :) :) :). ஒரு புது விதமான அனுபவம், பயத்தினூடே.

ஒரு காரைக் கண்டால் போதும் நமக்கு; அதை விடாமல் முடிந்தவரை துரத்திக்கொண்டு அதன் பின்னாலே சிறிது தூரம் பயணிப்போம். ஆனாலும் வழித்தடம் சேன்ஷே இல்ல..!!! இரண்டு பக்கமும் மலைத்தொடர்கள், பாதாளம் போல ஒரு பக்கம், நல்ல குளிர் காற்று என செம திகில்.பயத்தைப் போக்க எங்க அம்மணியுடன் இப்ப வந்துரும், பக்கம் தான் என பேசிக்கொண்டே எனக்கு நானே தைரியத்தைக் கொடுத்துக்கொண்டு சென்றேன். இதில் நாம் செல்வது சரியான வழிதானா எனக்கூடக் கேட்க ஆளில்லை. :) :) பெண்டாய் செனாங் என்ற போர்ட் கண்டவுடன் அப்பாடா, தப்பிச்சுட்டடா தங்கராசுன்னு பெருமூச்சு வந்தது.

வண்டிய நேரா ’டொமேட்டோ நாசிக்கந்தர்’க்கு செலுத்தி ஆளுக்கு ரெண்டு சிக்கன், மீன், புரோட்டா என ரொப்பியவுடன் மனசாந்தி அடைந்தது, ஆங் மறந்துட்டேன் டிவைன். :) :) :)

இனி வரும் பகுதியாவும், கண்ட இடங்கள் அதன் சிறப்பம்சம் என பகிர்கிறேன். மொக்கையா இருந்தா ரெண்டு புரோட்டா வகுரு முட்ட சாப்பிடுங்க, அல்லாம் சரியாகிடும்....

2 கருத்துகள்:

 1. கலக்கல் ...
  அடுத்த பதிவு வரும் நாளை
  எதிபார்த்துக்கொண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பா... நாளை பதிவிடுகிறேன், இதன் அடுத்த பகுதியை... (ஜூனூன் தமிழ் மாதிரி இல்ல :) அலுவகத்தில் வேலை கொஞ்சம் அதிகம், அதான் தாமதம்

   நீக்கு