புதன், 28 ஆகஸ்ட், 2013

மலேசியா போகலாமா..!!! (பகுதி-1)

முன் கதை சுருக்கம்..!!!

இங்கு என் மகன் யோகவிற்கு ரெண்டு மாதக் கால கோடை விடுமுறை (ஜீலை மற்றும் ஆகஸ்ட்). அவன் நெம்ப போரடிக்குது என்பதால் ஒரு வார முடுமுறை அவனுடன் செலவழிக்கலாம் என திட்டம். பொதுவாக 10 நாட்கள் மட்டுமே விடுப்பு கொடுக்கும் கம்பெனி, இங்கு துபாயில் ரம்ஜான் மாதம் என்பதால் 1 மாத லீவு அதிசியமாக கிடைத்தது. ஒரு வாரம் வீட்டில் இருந்தாலே நம்ம டவுசர் அவுந்திரும், ஒரு மாதம் தாங்காது என எங்காவது வெளியில் அழைத்து செல்லலாம் என்ற திட்டம் உதயமானது.(நம்ம வாய் அப்படி, எதாவது பேசி, என்ர அம்மணிகிட்ட உதை வாங்குவதே பொழப்பா போச்சு)

நம்ம ஊரு கோயமுத்தூருக்கு செல்லலாம் என்ற நினைப்பு வந்தாலே அபிமன்யு கதி தான் மனதில் படமாக ஓடுகிறது. ஒண்டியாவே எங்க அம்மணிகிட்ட சமாளிக்க முடியவில்லை.. உடம்பு முழுவதும் புத்தூர் கட்டு, இதில் ஊரில் என்றால் சக்கர வியூகத்தில் நிராயுதபாணியா நிற்கும் அபிமன்யுவாக நான்.... உள்ளே போக மட்டும் தான் தெரியும் (அபிமன்யு போல), எல்லோரும் ரௌண்டு கட்டி அடிப்பாங்க. பேந்த பேந்த முழித்து முழி பிதுங்கி துபாயில் வந்து காலடி வைக்கும்போது தான், அப்பாடா புழச்சுட்டடா ஹரி என்று மூச்சே விட முடியும்..!!!

இத்தனை வருடம் தவிர்க்க முடியா காரணங்கள் இருந்தது. அம்மா, வீடு வாங்குவது, தம்பியின் திருமணம் என அனைத்து பொறுப்புகளும் முடிந்தவுடன் வாண்டடா போய் மீண்டும் மாட்டுவோமா....??? ஹ்ம்ம்ஹூம்... புழச்சுட்டடா கைப்புள்ள....!!!

வெளிநாடு என்றவுடன் மனதில் தோணிய முதல் ஊர் ஜெர்மனி, உலக புகழ் எழுத்தாளர் மற்றும் நம்ம அன்ணன் ராஜ்சிவா இருக்காரே.. எல்லாம் அவர் பார்த்துக்குவார், நம்ம அம்மா போல பாசத்தை காட்டுவாரே என்ற ஃபீலிங்ஸ் கூடுதல் உந்துதல். ஆனா அயல்நாட்டு சதி, அங்கு செல்ல செலவு கண்ணாபிண்ணா எனவாகும் என்ற அச்சம் நடுமண்டையில் பொளேர் என அடித்தது. மற்றொன்று விசா கெடுபிடிகள்....

சரி நமக்கு தோதான அதே சமயம் நம்ம ஊரு திசையே தெரியா வட இந்தியாவில் இருக்கும் சிம்லா, குளு, மணாலி, டார்ஜ்லிங்,  தாஜ்மகால் என பயணத்திட்டம் போட்டேன்.

நம்ம பவர் என்னவென்று நமக்கு அப்போதான் புரிந்தது. திட்டம் போட்ட அடுத்த நாளே, ஊரே அழியும் வண்ணம் கனமழை, புயல் என சிவபெருமானே பெயர்த்துகொண்டு ஓடுறார்.... நம்ம திட்டத்திற்கே ஊரே அழியுதே, இந்த லட்சனத்தில் நாம அங்கு சென்றால் என்னாவது என்ற இந்திய மக்கள் நலன் கருதி, உலக சாந்தி வேண்டி பயணத்தை ஸ்ரீலங்காவிற்கு மாற்றினேன்.

அங்கு என் துபாய் நண்பர் மூலியமாக விசாரித்தேன். என்னுடன் பணிபுரியும் பெண் ரெண்டொரு நாளில் ஸ்ரீலங்கா செல்வதாகவும், அங்கு சென்றவுடன் தட்பவெப்பம், சூழ்நிலை பற்றி தகவல் தருவதாக சொன்னாள். ரெண்டாவது நாள் என்னுடைய ஈமெயிலில் கதறல் குரல், அப்பெண்ணிடமிருந்து. தயவு செய்து இங்கு வர வேண்டாம், ஊர் பூரா பேய் மழை, எங்கு பார்த்தாலும் வெள்ளம், தண்ணீர் நிரம்பி ஓடும் ரோடுகள் என... இப்பொழுது தான் நானே ஜெர்கானேன். என்னடா இது, நம்மகிட்ட இப்படி ஒரு பவர் இருக்குன்னு இவ்ளோ காலமா தெரியாம போச்சேன்னு :) :) :)

சரியென்று, மனம் தளறாமல் பட்ஜெட்டை சிறிது கூட்டி மலேசியா என முடிவானது. எங்கு போவது, என்ன பயணத்திட்டம் என ஒன்றும் இல்லை. நம்ம ராசி பத்திதான் இப்ப உங்களுக்கே தெரியுமே...!!! அதனால் எதை பற்றியும் விசாரிக்காமல், ஒரே நாளில் விசா எடுத்துவிட்டேன்.

(நான் ஏற்கனவே என் அம்மாவை அழைத்து கொண்டு நான்கு வருடத்திற்கு முன்பு சென்றுள்ளேன். என் மனதில் என்றும் பசுமையாக இருக்கும் நினைவுகள் அவை. அவர்கள் அவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள். பிறகு ஒரு வருட இடைவெளியில் காலமாகிவிட்டார்கள்)


 65 திர்ஹாமிற்கு ஒரு விசா கிடைக்கிறது துபாயில்.. விசா ஃபார்மாலிட்டீஸ் ஒன்றும் பெரிசா இல்லை, வெறும் தங்கும் இடம், விமான டிக்கெட், கம்பெனி கிட்ட ஒரு கடிதம் மட்டும் போதும். (காலை விண்ணப்பித்தால் அடுத்த நாளே கிடைக்கிறது)

என் பயணத்திட்டம் 11 நாட்கள். முதல் 4 நாட்கள் லங்காவியிலும், 2 நாட்கள் பினாங்கிலும், மீதி 4 நாட்கள் கோலாலம்பூரில் சுற்றவும் என வரைவு திட்டம். நம்ம முகநூல் மலேசிய நண்பர் ’தமிழ் புகழ் தமிழ்மகனிடம்’ மட்டும் அங்கு வருவதை சொல்லிருந்தேன். ஆனால் எங்கு செல்வது, எந்தந்த இடத்தை பார்ப்பது என்ற விரிவான திட்டமேதும் இல்லை. ஒரு குருட்டு தைரியம் தான்.

ஓமான் ஏர்ஸ்’ என்ற விமானத்தில் 1 Stop-Over ல் புக் செய்தேன். துபாயில் இருந்து மஸ்கட் சென்று, அங்கிருந்து கோலாலம்பூரில் தரையிறங்கும். சுமாராக 9.30 மணி நேர விமான பயணம்.  ஒரு நபருக்கான டிக்கெட் விலை 1,600 திர்ஹாம்ஸ். ஸ்டாப்-ஓவரில் வைட்டிங் வெறும் 45 நிமிடங்களே. நமக்கு மஸ்கட் இறங்கி, அடுத்த பிளைட்டை பிடிக்க சரியாக இருக்கும்....


மிக மிக அருமையான சர்வீஸ். புத்தம் புதிய விமானம். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸை விட சர்வீஸ் அட்டகாசம். பயண நேர முழுதும், ஏதாவது ஒன்னு வந்துகொண்டே இருக்கு.... நமக்கு அதானே முக்கியம்.... டவலில் ஆரம்பிச்சு சாக்லேட், நட்ஸ், டிரிங்ஸ், சாப்பாடு, ஜூஸ், ஸ்னேக்ஸ், மீண்டும் ஜூஸ் என ஏக அமர்க்களம்... ஒவ்வொரு சீட்டின் முன்பும் சின்ன கம்பூட்டர் திரைகள், நாம் படம் பார்த்துக்கொண்டு போக. பயணத்தின் நடுவில் ஒரு சிறிய லெதர் பேக் ஆளுக்கொன்று கொடுத்தார்கள், பாஸ்போர்ட் வைத்துக்கொள்ள. திறந்து பார்த்தால் சிறிய பிரஸ், டூத்பேஸ்ட், கண்களை கட்டி தூங்க கருப்பு துணி (சதிலீலாவதி படத்தில் கமல் போட்டுப்பாரே, அதே தான்), சாக்ஸ் என்று. சத்தியமா இந்த சாக்ஸ் எதற்கு எனக்கு என்றே தெரியவில்லை. என் மனைவி கரேக்டா அதே கேள்வியை கேட்டாள். நாமா தான் தெரியாது என்று சொல்ல மாட்டோமே... :) :) :) பாத்ரூம் செல்லும் போது போட்டுக்கொள்ள இருக்கும் என்றேன். என் மகன் சில விநாடிகளில் அப்பா என்று, காலில் போட்டுக்கொண்டு இது தூங்க என்றான்.... பல்பு பல உடஞ்சு சிதறுச்சு பாருங்க... :) :) :) இப்பவே இப்படியா...


துபாயில் ஜூலை 21 இரவு 7.15 மணிக்கு தொடங்கி 8.20 மஸ்கட் அடைந்தது. 9 மணிக்கு வேறொரு பிளைட்டில் கோலாலம்பீரில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தரையிறங்கும் வரை தூக்கமே இல்லை. பையன் ஏகப்பட்ட கேள்விகள், போதாதென்று திரையில் Tom & Jerry, Ice Age என பல கார்டூன்கள், கேம்ஸ் என மாறி மாறி போட்டுக்கொடுக்க வேண்டும்.


கோலாலம்பூரில் இருந்து லங்காவி தீவிற்கு உள்நாட்டு விமானத்தில் செல்ல வேண்டும். 3 மணி நேர இடைவெளியில் ஏர் ஆசியா விமானத்தில் டிக்கெட் போட்டிருந்தேன். அதற்கான விமான நிலையம் ஒரு 30 நிமிடத்தொலைவில் இருந்தது. டிக்கெட் விலை வெறும் 60 திர்ஹாம்கள். (ஒரு வழி மட்டும்)

கோலாலம்பூரில் தமிழை முதன்முதலாக சந்தித்தோம். மனுஷன் அம்புட்டு அடக்கமா பவ்யமா வந்திருந்தார். தென்றல் ஜோதியுடன் தொலைபேசியில் உரையாடிவிட்டு ஏர்போர்டில் இருக்கும் தமிழ் உணவகத்தில் சாப்பிட சென்றோம்.  கருமம், ஒன்னும் வாய்ல கூட வைக்க முடியல. :( ஆரம்பமே அமர்க்களம் தான் போங்க.

ஆனால் முகநூல் தந்த தமிழ், மனம் முழுவதும் நிறைந்தார்... எங்களுக்கு லோக்கல் மொபைல் நம்பர் வாங்கித் தந்தார். பிறகு அடுத்த உள்நாட்டு விமானத்திற்கு டாக்ஸியில் சென்றோம். தமிழின் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு எங்களுடன் வந்தார். pre-paid Taxi யில் செல்ல 42 மலேசிய ரிங்கிட்டுகள ஆகிற்று. இங்கு தமிழர்கள் எல்லோரும் மலேசிய ரிங்கிட்டை வெள்ளி என்றே அழைக்கிறார்கள். இனிமேல் தான், பயணக் கட்டுரையே தொடங்கும்... அவ்வ்வ்வ் :) :) :)

3 கருத்துகள்: