புதன், 15 ஜனவரி, 2014

வாழ்க்கையில் கற்ற மற்றொரு பாடம்…!!! - Your small life is someone’s big dreamநேற்று எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமொன்று நடந்தது. இதே (துபாயில்) அமீரகத்தில் வாழும் நாம் அறியா ஒரு மனிதனின் இருண்ட பகுதியை அறிய நேரிட்டது. ஆடு ஜீவிதம் கதையில் வந்த உண்மை சம்பவம் போல.  அதை பற்றியதொரு பதிவு.

பொதுவாக துபாயில் வந்து பணிபுரிபவர்களை எப்படியெல்லாமோ நினைக்கும் நிலையில் வேறொரு வாழ்க்கையை வாழும் ஒருவரைச் சந்தித்தேன். நம் நாட்டில் உள்ள மக்கள் ஏனையபேர் துபாய் என்றாலே ஆடம்பரம், பணக்கார மக்கள், ஊர், துபாயில் பணம் காய்க்கும் மரம் இருக்கும் என்ற நினைப்பு தான் வரும்... :)

நேற்றைய நாள் ஆணிப்புடுங்க புஜேரா செல்ல நேர்ந்தது. ஃபுஜேரா செல்வது என்றாலே நயந்தாராவை பார்க்க போவது போல ஒரு கொண்டாட்டம் நமக்கு. நிற்க - எங்கூட்டு அம்மணி, மற்றும் தாய்குலங்கள் ஃபுஜேரா செல்வது என்றாலே மனதில் என்னமோ ஊட்டி செல்வது போன்ற குதூகலம் வந்துவிடுகிறது என வாசிக்கவும். நானும் நல்லவனுங் :) :) இது சத்தியமுங் அம்மணி....

காரணம் காரில் செல்லும் வழி, செம்ம அட்வென்சரா இருக்கும். துபாயில் இருந்து 3 மணி நேர பயண தூரம். பாலைவனம், மலைகள், கொண்டூசி வளைவுகள், பள்ளத்தாக்கு போன்ற மலைகளின் ஊடே செல்லும் வழித்தடம். அவ்வாறு கடந்து சென்றால் நம் பாண்டிச்சேரியை போல ஒரு பக்கம் முழுவதும் கடலும், மற்றொரு பக்கம் ஊரும் இருப்பது இதன் சிறப்பு.

என் வேலை, மீட்டிங், மெஷெர்மண்ட் செக் செய்வது, அளப்பது என எல்லாம் முடிந்து 4 மணியளவில் என்னுடன் வந்த அலுவலக நண்பருடன் சாப்பிட புறப்பட்டோம். கொலைப்பசியில் இருந்ததால் எங்கே வகுத்த நிரப்பலாம் என்ற அயின்ஸீன் கொஸ்டீன் எழுந்தவுடன், கடற்கரை ஒட்டி அமைந்த ரெஸ்டாரண்டில் சாப்பிடலாம் என்ற என் நீண்ட நாள் ஆசைக்கு மூடுவிழா எடுத்தோம். 20கி.மி.ல் இருக்கும் கொர்ஃபக்கான் என்ற இடத்தில் பீச் ஒட்டிய .கோல்டன் ஃபோர்க் என்ற அருமையான உணவகம் போய்ச் சேர்ந்தோம்.

கம்பெனிக் காசில் திணிசு திணிசா ஆர்டர் செய்துவிட்டு (ஓசின்னா பெனாயிலே குடிப்போம், விட்டிருவோமா என்ன JJJ) கடலை காணும்போது மனசில் அவ்வளவு ஒரு இனம்புரியா சந்தோஷம் தாண்டவமாடியது. இமாலய சரக்கு கப்பல் வருவதும், பாட்ஜ் படகு வழி நடத்துவதும், நிறைய மீன்பிடி படகுகள் செல்வதும் என பார்த்துக் கொண்டே உணவருந்தினேன். அதில் ஒரு இடத்தில் மீன் பிடிக்கும் முறையில் இருந்த செய்முறை வித்தியாசம், அதிக ஆர்வத்தைக் கொடுத்தது. வைத்த கண் வாங்காமல் அங்கே பார்க்க நேரிட்டது.

சாப்பிட்டப் பின், ஆர்வமிகுதினாலும் வகுரு நிரம்பியதாலும் ரிலாக்ஸாக அருகில் சென்று பார்த்தோம். சுமார் 750 மீட்டர் (முக்கா கிலோமீட்டர்) சுற்றளவு கொண்ட ராட்ஷச மீன்வலையை கடலில் விரித்து வைத்திருந்தார்கள். அவ்வலையை கரைக்கு இழுக்கும் வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள்.

வலையின் இருமுனையும் (இரண்டு பக்கமும்) 4x4 பிக்-அப் காரைக் கொண்டு ரிவெர்ஸாக ஓட்டி கயிற்றை இழுக்கிறார்கள். அந்த பிக்-அப் ஜீப் முன்னும் பின்னும் சென்று மீதி வலையை கரைப்பகுதிக்கு கொண்டுவர செய்துக் கொண்டிருந்தார்கள்.

வண்டி ஓட்ட ஒருத்தர், மீன்பிடி கயிற்றை வண்டியில் கட்டவும், ரிவெர்ஸ் போய் வந்தவுடன் கயிற்றை அவிழ்க்கவும் மீண்டும் கட்டவும் என ஒருத்தர்,  இழுத்த கயிர்றை சுருட்டி வைக்க ஒருவர் என மூவர் டீம் ஒரு முனையில். இதே போன்றொரு டீம் மறுமுனையும்,இதே வேலையை கோர்வையாக இழுக்கிறார்கள். சுறுசுறுப்பு என்றால் அப்படி ஒரு சுறுசுறுப்பு. (நம்மூரில் ஏலேலோ ஐலசா என்று நிறைய மனிதர்கள் ஒன்றாக இழுப்பார்களே, அவ்வேலையை இவ்வாறு செய்கிறார்கள். சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணி வலையில் பெரிய திமிங்கலம் மாட்டிகிச்சு என்று இழுப்பார்களே… இந்த பல்லே பல லட்சம் போகும், அதன் தோல் 1 கோடிக்கு மேல போகும் என்று அடிச்சு விடுவார்களே அதே தான்…)

அந்த மூவர் அணியில் இருக்கும் ஒரு மலையாளியிடம் பேச்சுக் கொடுத்தேன். மனிதருக்கு 50 வயது இருக்கும். மனுஷன் என்னமா உழைக்கிறார்!!! மொத்த வலையையும் கடற்கரைக்கு கொண்டு வர இன்னும் எவ்வளவு நேரமாகும், என கேட்டவுடன், இன்னும் 1 மணிக்கு மேலாகும் என்றார். இந்த வலையில் அகப்படும் மீன்கள் சுமார் 6 வண்டி நிறையும் என்றார். தோராயமாக 30,000 திர்ஹாம்ஸ் கூட போகும் என்றார். மனதில் இருந்த பிரம்மாண்டம் படர்ந்ததால், பார்த்து விட்டுத்தான் போக வேண்டும் என்ற ஆசையில் இருந்தேன்.

பேச்சினூடே அவரின் வாழ்க்கையையும், காசிக்கோடு சொந்த ஊர் எனவும், அமீரகத்தில் 16 வருடம் இருக்கிறார் எனவும், சவுதியில் 3 வருடம் இருந்தார் எனவும் அறிந்தேன். அதிகாலை 3 மணிக்கு 6 வெவ்வேறு மோட்டர் படகில் சென்று மாபெரும் வலையை விரித்ததாகவும், இன்னும் உண்ணவில்லை என்றும் கூறினார்.
அவரிடம் பேசப்பேச மனசு கனத்து கொண்டே போனது. இங்கு ரெண்டு வருடம் வேலை செய்வதாகவும் தன் முதலாளி அவ்வளவாக தொழிலாளர் மீது அக்கரை காட்டுவது இல்லை எனவும் அறிந்தேன். தன் முதலாளி சாப்பாடு வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றவர் மணி 5 ஆகியும் ஆளே காணோம் எனவும் கூறினார். காலையில் இருந்து உண்ணாமல் இவர்களின் இந்த சுறுசுறுப்பு பிரம்பிப்பைத் தந்தது. நேற்று பௌர்ணமி நாள், அதனால் மீன் சிக்குவது கொஞ்சம் சிரமம் என்றார். பார்ப்போம் என்று பேசிக்கொண்டே வேலை செய்தார்.

இவரில் சம்பளம் 1300 திர்ஹாம்ஸ். உணவு தங்குவது எதுவும் முதலாளி பார்த்துக் கொள்வது இல்லை. எல்லாம் இந்த சம்பளத்தில் பார்த்தாக வேண்டும் என அறிந்தவுடன் தொண்டை அடைத்தது.
சென்ற வாரம் ’லூசியா’ கன்னட படம் ஹேங்கோவரில் வரும் இறுதி எழுத்து என்னை மீண்டும் பாதித்தது. Your small life is someone’s big dream. எவ்வளவு உண்மை என்று மீண்டும் நிருபித்தது.

நான் வாழும் இவ்வாழ்க்கையிலே ஆயிரம் குறைக் கண்டுக்கொண்டு இருக்கிறேன். அவரின் சொற்ப சம்பளத்தில் எவ்வளவு கனவுகள், எவ்வளவு ஆனந்தம், என்னுடன் பேசும்போது அவரின் பூரிப்பு, எதையும் கடந்து போகும் குணம் என மனுஷன் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்,

வாழ்க்கையில் கற்ற மற்றொரு பாடம்…!!!


இறுதியில் வலை கரையை நெருங்க, சடாரென கிட்டதட்ட 500 பறவைகள் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை, வலையில் இருக்கும் மீன்களை கொத்த வந்தது. கடைசியாக அவர் கூறியது போல வலையில் பெரிதாக ஒன்றும் தேரவில்லை. ஒரு சில கிலோ மீன்களே மிஞ்சியது, எந்த வித ஏமாற்றமும் அவர் மனதில், உடலில் இல்லை. அதே சுறுசுறுப்புடன் தான் காணப்பட்டார். எனக்கு சிறிது ஏமாற்றம் இருப்பினும் மனிதரின் செயல், பேச்சைக்கண்டு மனதில் புது தெம்பு பூத்தது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக