திங்கள், 14 ஜனவரி, 2013

Spirit - Malayalam Movie Review


மோகன்லால் என்றாலே இயல்பான நடிப்பில் அசரடிப்பவர் மற்றும் லைம்லைட் காமெடியில் கலக்குபவர் என்று பிராண்ட் உண்டு. கடந்த சில வருடங்களாக தடம்புரண்டு ஹீரோயிசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மோகன்லால் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஃப்ளாப் :):):) தமிழ் படத்தை பார்த்து கெட்டாரோ அல்லது மம்முட்டியை கண்டு வாயப்புளந்து அவர் ஸ்டைலில் செய்ய நினைத்தாரோ என்னவோ !!!

தீடீருன்னு நடுமண்டைல பல்பு எறிஞ்சவரா தனக்கு என்ன வருமோ அதை செய்வோம் என்று தன் பாணிக்கு ஒரு அட்டகாசமான டீமுடன் ‘Spirit’ என்ற இந்த படத்தின் மூலம் திரும்பினார் மனுஷன். சும்மா சொல்லக்கூடாது, மனுசன் தன்னுடைய நடிப்பில் பின்னிப் பெடல் எடுத்துட்டார் JJJ
Spirit Movie
 சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டான பிராஞ்சி ஏட்டன் அண்ட் தி செயிண்ட் & இந்தியன் ரூபி ஆகிய படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ரஞ்ஜித்தின் மற்றொரு படைப்பு. கதைக்கு ஏற்ற மிக அருமையான பட தலைப்பு. Spirit என்றால் மது (எரிசாராயம்) என்றும் பொருள் கொள்ளலாம்; அல்லது (மன)தைரியத்தை காட்டு என்றும் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டையும் ஒருங்கிணைக்கும் விஷயங்களே கதை. இனி கதைக்கு செல்வோம்.

ரகுநந்தன் ஒரு முன்னால் அயல்நாட்டு வங்கி ஊழியன், பல்வேறு வெளிநாட்டில் பணிபுரிந்தவன், தன் மனதிற்கு பிடிக்காத ஒன்றை எப்பொழுதும் செய்யாதவன், தன்பணி Bore அடிப்பதால் பணம் கொழிக்கும் தன் வேலையை உதறிவிட்டு தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளரா இருக்கார். ‘Show the Spirit’  என்ற டிவி நேர்காணல் நிகழ்ச்சி நம் நீயா நானா  போன்று மக்களிடத்தில் ஏக வரவேற்பு பெற்ற ஒன்று.  இந்நிகழ்ச்சியில் வருபவரை தன் கேள்விக்கணைகளால் பெண்டெடுக்கும் ரகுநந்தனாக மோகன்லால். அரசியல்வாதி, பிசினஸ்மேன், உயரதிகாரிகள், IPS போலீஸ் ஆபிஸர் என யாராக இருந்தாலும் தன் கேள்விகளால், பேச்சால் அவர்களின் இருண்ட பகுதியை வண்டவாளமாக்கி, மக்களின் பேராதரவைப் பெற்றவர். அடிப்படையில் நல்லவர்.
இப்பேர்பட்ட ரகுநந்தனுக்கு, மக்களுக்கு தெரியாத மற்றொரு பக்கம் உண்டு. அதான் குடிக்கு அடியாகி கிடப்பது. குடியில்லாமல் தன்னால் இருக்க முடியாது என்ற நிலைமை. இவ்வளவு ஏன், டிவி நிகழ்ச்சியின் இடையில் விடும் பிரேக்கிற்கு நடுவில் காபி கப்பில் ஒரு பெக் வோட்கா அடிக்கும் பழக்கம் கொண்டவன். சரக்கு அடித்தபடியே நிகழ்ச்சியை தொடர்பவன். காலை எழும்போது வாய் கொப்பளிக்க கூட சரக்கை நாடுபவன், அத்தனை விலையுயர்ந்த சரக்கையும் சேர்ப்பதில் பருகுவதில் ஆர்வம் கொண்டவன், தனக்கென பிரத்தேக பார் அமைப்பு வீட்டில் உண்டு, அது தவிர ரெகுலராக செல்லும் பார், அங்கு தனக்கான பிரத்தேக இருக்கை, ஆங்கிலத்தில் தன் முதல் நாவல் எழுதிக்கொண்டிருப்பவன்.


தன் மனதிற்கு பிடித்ததை யார் சொன்னாலும் அதை நிறுத்தாதவன். குடியின் காரணமாக, தன் இல்வாழ்க்கையில் விவாகரத்து பெற்றவன். விவாகரத்து ஆனாலும் தன் மனைவி மற்றும் தற்போதைய கணவருடன் நல்ல புரிதலில், நட்பில் இருப்பவன். தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த மாற்று திறனாளியான (Deaf-dump) மகனை, மறுமண தம்பதிகள் அவர்களின் பராமரிப்பில் வளர்ப்பவர்கள் என இதை திரையில் பார்க்கவே ஒரு கவிதை போல உள்ளது. தமிழில் ஏன் எப்படி ஒரு நல்ல காட்சிகளை வைக்க முற்படமாட்டிறார்கள்??? நான் குறிப்பிடுவது ரகுநந்தன் மனைவியின் மறுமணம், அதற்கு பின்பு இருவருக்குள் இருக்கும் நட்பு ரீதியிலான புரிதல். எனக்கு பிடித்த செம சுவாரஸ்யமான பகுதியும் கூட. காணும்போது அட என ஆச்சர்யப்பட்டேன். மோகன்லாலுக்கு செம ஸ்கோப்.
சமீராக வரும் நபர்
ரகுநந்தனின் நண்பனான சமீர், ஒரு கவிஞனும் கூட. குடியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அங்கு குடி இல்லாமல் இருக்க முடியாமல் ரகு வீட்டிற்கு தப்பி வருகிறான். பல நாள் பட்டினி கிடந்தவன் போல் பரபரப்பாக பாட்டிலை திறந்து குடித்து, அந்த நொடியே சாகிறான், ரகுநந்தனின் மடியில். இந்த சம்பவம் ரகுவை வெகுவாக பாதிக்கிறது, இதன் காரணமாக முதல் முறையாக குடியில் இருந்து மீழ்வதைப் பற்றி யோசிக்கிறான். மற்றொரு புறம் தன் வீட்டு வேலைக்காரியான கல்பனாவின் கணவர் மணி, மொடாக்குடிகாரன். குடியால் நிதானம் இழந்தால் தன் மனைவியை போட்டு அடித்து நொறுக்குபவன்.  மற்றொரு சம்பவத்தில் மணி, தன் மகனையே மண்டை உடையும் அளவிற்கு அடிப்பவன். இச்சம்பவங்கள் ரகுநந்தனை ஆழமாக சிந்திக்க வைக்கிறது.
குடிகார மணியாக நந்து
குடியால் எல்லோர் வாழ்க்கையும் எப்படி சீரழிக்கிறது; குடி ஒரு சாதாரண பிரச்சனையில்லை; சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக உணர்கிறான். இப்போது மிகத்தெளிவாக தன் ஷோ த ஸ்ப்ரிட் நிகழ்ச்சியின் மூலம் ஒரு புதிய ப்ராஜெக்ட்டைத் தொடங்குகிறான். அது என்ன ப்ராஜெக்ட்? ரகுவின் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பது தான் மீதி கதையே. முடிவு என்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மோகன்லால் மீது நமக்கு காதலே வந்துவிடும் போல, அவரின் நடிப்பை பார்த்தால்.... Chanceless Acting. இவரை தவிர யார் நடித்து இருந்தாலும் படம் ப்ளாப் தான் என நினைக்கிறேன். இவருக்கு மாற்றே யோசிக்க முடியாத நடிப்பு. மிதமாக குடித்து நடிக்கும் பாங்கு, பார்த்தால் தான் புரியும். நம் தமிழ் படத்தில் காட்டுவதை போல் ஓவர் அலம்பல் இல்லாமல், ரெண்டு பெக் அடித்தவன் எப்படி நடப்பான், கண்கள் எப்படி இருக்கும், என்ன பேசுவான் என கணகச்சிதம். Love u laalaetan. 

படத்தின் வெற்றியில் பெரும்பங்கு ’Right casting’. அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற மிகத்சரியான ஆட்கள். வீட்டுவேலைக்காரியாக கல்பனா, குடிகார மணியாக நடித்த நந்து, IPS ஆபிஸர் சுப்பிரியா, மனைவியாக கனிகா, மறுமண கணவர் சங்கர் ராமகிருஷ்ணன், அச்சிறுவன், சமீராக வரும் நண்பர் என அசத்தல். எல்லோரும் செம பர்பார்மென்ஸ். இதே போல, எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லாமல் பார்த்துக்கொண்டதில் இயக்குனர் வெற்றி பெற்றார்.

குடிப்பழக்கத்திற்கு எதிரான படம் என்பதால் ஏதோ கருத்து சொல்லும் படமாகவோ டாக்குமெண்ட்ரியைப்போல இருக்கும் என்றோ நினைக்கவே வேண்டாம். இயக்குனர் என்ன சொல்ல நினைத்தாரோ அதை சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்.

எனக்கு ஒரே ஒரு வருத்தம். நம்ம திலகரை வீணடித்துவிட்டார்கள் என்பதே. மிகச்சிறிய கதாபாத்திரம், அதிலும் தன் முத்திரையை அவர் பதிக்க தவறவில்லை. எனக்கு பர்ஷனலாக முதல் பாதி தந்த பிரம்மிப்பு இரண்டாம் பாதி தரவில்லை JJJ ஆனால் படம் கண்டிப்பாக பார்க்கலாம்.

இப்படம் கேரளாவில் 100 நாட்களுக்கு மேல் ஓடோஓடென்று ஓடியது. இப்படம் தந்த தெம்பில் மோகன்லால் நடித்த மற்றொரு வெற்றிப்படம் Run Baby Run. அதை அடித்த பகுதியில் பார்ப்போம்.

புதன், 9 ஜனவரி, 2013

யோகவும் நானும் - Yogev’s Assessment Exam for K.G.1


Yogev’s Assessment Exam for K.G.1

துபாயில் Indian High School என்ற பள்ளி பிரசத்தி பெற்றது. அதில் சீட் கிடைக்க எப்பவும் செம்ம தள்ளுமுல்லு தான். அவர்களின் புதிய ஸ்கூலான Indian International Schoolல என் மகனுக்கு இடம் பிடித்தேன்.

இன்று அவனுக்கு
Assessment test  நடக்கும் நாள். வீட்டில் இருந்து கிளம்பும் முன் என் அம்மாவின் முன்பு தொட்டு கும்பிட்டுகொண்டு கிளம்பச் சொன்னேன். இன்று காலை ஆபிசுக்கு லீவு போட்டுட்டு, என் மகன் யோகவ்வை மதிப்பீட்டு தேர்விற்கு பள்ளிக்கு அழைத்து சென்றோம். இதில் யோகவ் வென்றால் தான் பள்ளியில் சேர அனுமதி. ஆனால் அட்மிஷன் ஃபீஸ், பஸ் ஃபீஸ், டியூசன் ஃபீஸ், நிர்வாக ஃபீஸ், எக்‌ஷ்ரா கரிகுலர் ஃபீஸ் என பலதும் ஏற்கனவே உருவிட்டாங்க. இருந்தாலும் * கண்டிசன்ஸ் அப்ளைல, இதில் வென்றால் தான் ஸ்கூலில்
சீட்
; இல்லையென்றால் பணம் திருப்பித் தரப்படும் என போட்டிருந்தாங்க.

நான் பரிச்சைக்கு செல்லும்போது கூட இவ்வளவு டென்சன் ஆகிருப்பேன் என நினைவில் இல்லை. கை கால் எல்லாம் ஒரே நடுக்கம், வாய்ஸ் கம்முது, வகுரு எல்லாம் கலக்குது, ஒரு பதற்றத்தில் உச்சா வருவது போல உணர்வு JJJ என எல்லாம் ஒரே நேரத்தில் அட்டாக் பண்ணுகிறது. (மனதில் அபியும் நானும் பிரகாஷ்ராஜ் அலக்‌ஷாண்டர் குதிரை சீன் படமாக ஓடி டர்ர்ர்ர் கிளப்புது).

இத்தனை பதற்றத்திற்கு காரணம் என் மகனுக்கு ஆங்கிலத்தில் அவ்வளவா பேசத்தெரியாது. தவறு எங்கள் மீதுதான். வீட்டில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி தான் பேசுவோம். இதில் கேள்வி கேட்ட பிச்சு உதருவான்
A,b,c,b முதல் 1,2,3...20, fruits, Vegetables, Animals அத்தனையும் அத்துபடி யோகவ்விற்கு. நான் அவ்வையார் ஆரம்ப பள்ளி சாலையில் படித்ததால், ஆங்கிலம் வாசலிலேயே நின்னுக்குது J. ஆனால் துபாயில் பொது மொழி ஆங்கிலம் தானே.

ஒரு வாரமா ரெடி மேட் இங்கிலீஷ் தான் சொல்லிக்கொருத்தோம். What is your Name, what is your father name, what is your mother name, How are you, what is this, come, go, get up, sit down….. ன்னு கேட்டா என்ன செய வேண்டும் என தெலுங்கில் சொல்லி புரிய வைத்தோம், என்ன பண்ண வேண்டும என்று ஒரே பாடம் தான்..... இதற்கு பதில் சொன்னால், மிஸ் உனக்கு நிறைய சாக்லேட் கொடுப்பாங்க, நானும் பாக்கெட் ஃபுல்லா கொடுப்பேன் என தாஜா செய்து வைத்தேன். 

ஒரு வழியா பள்ளிக்கு போனா, பையனை தனியா அழைத்து போவோம் என சொல்லிட்டாங்க, assessmentக்கு.. கிழிஞ்சது கிருஷ்னகிரி என நினைத்துக்கொண்டேன்.

யோகவ்கிட்ட மிஸ் உன்கிட்ட தனியா கூட்டிட்டு போய் அதே கேள்வி தான் கேட்பாங்க, நீ சொல்லு, நான் உனக்கு
big chocolate வாங்கி தரேன் என ஐஸ் வைத்தேன். அவன் கேட்காத மாதிரி, அவன் பாட்டுக்கு ஒரே விளையாட்டில் தீவிரமா இருந்தான்.

யோகவ் என அழைத்த்தும் டர்ர்ர் கிளம்பிடுச்சு. பையனை கூட்டிகொண்டு வாசல் வரை போனோம். மிஸ்,
How are you என கேட்டாங்க? யோகவ் ஐம் பைன் (Pine) என்றான்  அப்பாடா போதும்டா தப்பிச்சோம் என மனதில் சிறிய சந்தோஷம். யோகவ் அழுகாமல் போனதே ஆச்சர்யமாக இருந்தது.

போனவுடன், எப்படியும் ஐந்து நிமிட்த்தில் அலறியடிட்டு ஓடி வரப்போறான் என மனதில் ஒரே பதற்றம். மனசு கிடந்து அடிச்சுக்குது. வேற பள்ளியில் சேர்க்க வேண்டி வருமோ, இல்ல இல்ல எப்படியும் கிடைச்சிரும் என என் மனம் பலவாறு பேசுகிறது.

ஒரு 30 நிமிடம் கழிந்தும், யோகவ் பற்றி ஒரு அறிகுறியும் இல்லை.
35ஆம் நிமிடத்தில் மிஸ்சுடன் சிரித்துக்கொண்டே வந்தான். அதைக்கண்டவுடன் செம்ம ஆச்சர்யம். யோகவ் பெற்றோர்கள் வரவும் என்றார்கள். அருகில் சென்று மிஸ்சை வெரிச்சோ என என்ன சொல்லப்போகிறார்களோ என பார்த்தேன்.
கம்மிய குறலில், How did he? என்றேன். மிஸ், சிரிச்சுக்கிட்டே Your Son did very well and is Selected  என்று சொன்னாங்க பாருங்க... அதை விடவும் ஆச்சர்யம் தாங்கவே இல்ல.... தப்பிச்சோம்டா சாமி என்று.

செம்ம குத்து டேன்ஸ் ஆடனும் போல இருந்தது.
ஆடுகளம்படத்தில் வரும் பாடல் தான் மனதில் உடனே தோன்றியது ஹே ஒத்த சொல்லால என் உசுறெடுத்து வச்சிகிட்டாஎன்று.....

இன்று என் மகன் பள்ளியில் தேர்வான நாள். என் அம்மாவிற்கு நன்றி

வியாழன், 3 ஜனவரி, 2013

Arabikatha - Malayalam Movie Review


அரபிகதா மலையாளப் படம்
- நம் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம். 


உண்மையில் இப்படக்கரு கேரளாவில் கம்யூனிசம் எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்னும் உட்கருத்தை அடிப்படையாக வைத்து பகடியாக எடுத்தது. கம்யூனிஸ்டு தலைமை எளிய மக்களுக்காக பாடுபடாமல், ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் எந்த சித்தாந்தமும் இல்லாமல், சமூக அக்கறையில்லாததை ’Under Currentஆக எடுத்துரைக்கும் படம். தமிழ்நாட்டிற்கும் கம்யூனிசயத்திற்கும் பல கிலோ மீட்டர் தூரம், படத்தை நான் அனுபவித்த பார்வையில் தருகிறேன். 


இந்த படத்திற்கு போகும் முன் ஒரு ஃபிலாஷ்பேக். நான் துபாய் செல்கிறேன் என்றவுடன் ஒட்டகம் மேய்க்கவா? என்று நக்கலாக கேட்டவர் உண்டு. துபாய் ஒருச்சாராருக்கு சொர்க்க பூமி, மற்றவருக்கோ இது ஒரு பூலோக நரகம். இங்கு வந்த புதிதில், துபாய் அப்படிப்பட்ட ஊரில்லையே என்று வியந்தேன். பிறகு ஏன், நம்ம ஊரில் அப்படி ஒரு மாயத்தோற்றம் இருக்கு என ஆராய்ந்தேன். அதன் தொடர்ச்சியாக இங்கு வாழும் கூலி ஆட்கள் (Labour Category)ஆட்களின் சூழ்நிலையும், சம்பளமும், அவர்கள் வாழ்க்கை முறையும், இங்கு எவ்வாறு அகப்பட்டார்கள் என்பதைக் கண்டு அதிர்ந்து போனேன். இப்படம் அச்சு அசலாக அவர்கள் வாழ்க்கையைப்பற்றி பொட்டில் அடித்தாற்போல சொல்லும் படம்.


இனி படத்திற்கு செல்வோம். நடிகர் ‘ஸ்ரீநிவாஸன்என்றாலே நல்ல கதையில் மட்டுமே நடிப்பார் என்று மலையாலத்தில் ஒரு தனி இமேஜ் உண்டு.. அதற்கேட்டாற்போல் அவர் நடித்த எல்லா படமும் நல்ல ஹிட்கள் தான். இதுவும் அந்த வரிசையில் ஒரு முத்து.

தன் வாழ்க்கையே கட்சிக்கும், மக்களுக்கும் அர்பணித்து கம்யூனிஸ சித்தாந்த கோட்பாடைக்கொண்ட கூபா முகந்தன், இடதுசாரி கம்யூனிஸ கட்சியை சேர்ந்த அதிதீவிர விஸ்வாசி. தன் செம்மனூர் ஊர் (கண்ணூர் மாவட்டம்) மக்களுக்கு எதுவெனினும் முன்னின்று போராட்டம் நடத்துபவர். இவரை ஓரம்கட்டிவிட்டு ஊழல் பேர்வழியான கருணானன் என்பவர் முன்னுக்கு வர துடிக்கிறார். இதே கிராமத்தில் ஒரு தோல் தொழிற்சாலை தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஜெகதீயை எதிர்த்து மக்களுக்காக போராட்டம் நடத்தி தடுக்கிறார். இவ்விருவரும் சூழ்ச்சை செய்து முகுந்தனை கடனில் சிக்கவைத்து, அதை அடைக்க சூழ்நிலை நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களின் குறை போக்கவும், அங்கு கம்யூனிஸத்தை கோலோச்சனும் உதவும் என ஏமாற்றி அனுப்பி வைக்கிறார்கள். இது ஏதோ கட்சிப்படம் என ஒதுக்கிவிடாதீர்கள். இது படத்தின் சிறுபகுதி தான்


ஸ்ரீநிவஸன் துபாய் வந்தவுடன், இங்கு அவரை வேலை வாங்கும் விதமும், அங்கு குறை கேட்டு தன் அப்பாவிதனத்தை காண்பிக்கும் விதம் செம்ம... அவ்வளவு ரகலையாக இருக்கும். தன்னை இப்படி பிழியும் முதலாளியை கண்டு தங்களின் கோரிக்கை பற்றி பேசலாம் என நினைத்தவருக்கு, அது அதிர்ச்சி. கம்யூனிஸ்ட்டான ஜெகதீதான் முதலாளி என அறியும் போது பேரதிர்ச்சி. ஜெகதீ தன் நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டி, அவர் மட்டும் சொகுசாக வாழ்கிறார். சில நாட்களில் தான் ஏமாற்றப்பட்டோம், சூழ்ச்சியில் வீழ்ந்தோம் என உணர்ந்து வேலையை துறக்கிறார். ஆனால் கம்யூனிஸத்தை விடவில்லை.


நல்ல வேலையில்லாதலால் தான் அனுபவிக்கும் கொடுமை, வறுமை, கடன் சுமையால் ஊருக்கு செல்ல முடியாத இயலாமை, அதன் காரணமாக கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும் நிலை என இங்கிருக்கும் உண்மை நிலையை அப்படியே அப்பட்டமாக கதையாக விரிகிறது. இது வெறும் அழுகாச்சு படமும் அல்ல. ஸ்ரீநிவாசனுக்கே உரிய நிறைய நகைச்சுவை காட்சிகளும் உண்டு. ஒரு சீனப்பெண்ணை கண்டவுடன் கம்யூனிச நாடு என்ற ஈர்ப்பில் மொழி தெரியாவிட்டாலும் அவரிடம் நட்புக்கொள்ள முயற்சி, பின்பு அதுவே மெல்லிய காதலாக மாறும் தருணம் என தென்றலாக கதை செல்லும். சீன பெண் கம்யூனிசத்திற்கு எதிரானவள், தன் காதலன் விடுதலைக்குதான் அவள் துபாய் வந்தாள் என அறிந்தவுடன், கம்யூனிச சிந்தாதப்படி தன் அத்தியாவசிய தேவைக்கு போக மீதி அனைத்தும் கஸ்டப்படும் மக்களுக்கே என தான் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை அப்பெண்ணிற்கு கொடுப்பார்.


பல வருட இன்னல்களுக்கு இடையே இறுதியில், தன் செம்மனூர் நண்பர்கள் உதவியுடன் இந்த போலி கம்யூனிஸ்ட்டுகளை (ஊழல் தலைமை கருனான்ன், தொழிலதிபர் ஜெகதீ, இவர்களின் கூட்டுச்சதி, ஏமாற்றியவர்கள்) என நாட்டிற்கு அடையாளம் காட்டிவிட்டு, தன் உயிர்மூச்சான கம்யூனிசத்திற்கும், நாட்டிற்கும், தன் மக்களுக்கும் பாடுபட மீண்டும் ஊருக்கு திரும்புவார். 


மலையாளத்தில் துபாய் பற்றிய கதையைக்கொண்டு மம்முட்டி, மோகன்லால் என பலர் நடித்தும், நிறைய சினிமா தோல்வியடைந்துள்ளது. ஏனெனில் அவையெல்லாம் வெறும் ஆடம்பரமாக, சொர்க்க பூமியாக மட்டுமே காண்பிக்கப்பட்டது. எதார்த்த சினிமாவாக இல்லை.

அரபு தேசத்தில் வாழ்பவர்கள், இப்படத்தை காண நேரிட்டால், கண்களில் நீர்கோர்க்கும் என்பது உறுதி. வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு, இப்படம் தமிழ் நாவலான ‘ஆடு ஜீவிதம்மனதில் வருவதை தவிற்க முடியாதது.

வியாழன், 13 டிசம்பர், 2012

கண்ணா..!!! துபாயில் ஃபிஷ் பிரியாணி திங்க ஆசையா..!!

அரபு தேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்த தலைப்பின் வசீகரம் தெரியும். ஒரு புன்முறுவலோடு அடப்பாவி, எந்த ஆடு சிக்கப்போகுதோ என மனதில் நினைத்துக்கொள்வார்கள்.

ஏன் இந்த தலைப்பு என்று புரியாதவர்களுக்கு, சிறிய விளக்கம் இதோ!

நம் ஊரில் மாமியார் வீட்டிற்கு போகனுமா என்பதை தான் இங்கு ஃபிஷ் பிரியாணி திங்க போறியா என கேட்பது... :) :) :)


 துபாய், சொர்க்க பூமி என்பதில் மாற்று கருத்தேதும் இல்லை. நிறைய சுதந்திரம் நிச்சயம் இருக்கு, அடுத்தவரை சீண்டாத வரையிலும்.  சரி, சட்டுபுட்டுன்னு விஷயத்திற்கு வருவோம். இங்கு இலவசமாக ஃபிஷ் (மீன்) பிரியாணி திங்க ஆசைப்படும் நபர்கள், தவறாமல் செய்ய வேண்டியவைகள் கீழே...!!

குறிப்பு : பின்விளைவுகளுக்கு, என்ற கம்பேனி பொறுப்பல்ல...

1. இங்கு பெண்களே உயர்ந்தவர்கள். அனைத்து ஆண்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆதலால் அவங்களை முதலில் திட்டிவிடுங்கள். உடனே பிரியாணி கேரண்டி

2. ’For Ladies Only' என்று போர்ட் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு என்ன இருக்கு என ஆராயலாம்

3. ஒரு ஃபிகரை, பெண்ணை வெறிச்சு பார்த்தா போதும்

4. லிஃப்டில் பெண் தனியாக செல்லும் போது, அதில் நாமும் பயணிக்கலாம். குறிப்பாக அரபி பெண் இருக்கும் லிஃப்ட் என்றால் சாலச்சிறந்தது. :)

5. அரபி பெண்களுடன் முதலில் முந்திரி கொட்டைத்தனமாக கைக்குலுக்குவது, பயன் தரக்கூடும்

6. அரபியை தொட்டு பேசுவது, யாராக இருந்தாலும்... 

7. ரோட்டில் எவன் சட்டையையோ பிடித்து டேய், நீ என்ன பெரிய பாடா என கேட்கலாம்

8. பொதுவில் கிஸ் அடித்தால், நம் மாமன் உடனே வருவான்

9. ச்சே, எப்படி பப்லிக்கில் கிஸ் அடிப்பது என தயக்கம் என்றால், கட்டிப்பிடித்தாலும் விமோச்சனம் உண்டு. குறிப்பு  - உங்க காதலி, மனைவியா இருந்தாலும் டீலிங் இதே தான்

10.  கில்மா மேட்டர் செய்து ஃபிஷ் பிரியாணி ருஷியை அறியலாம். ஆனால், இதற்கு அடுத்த ஆள் போட்டுக்கொடுக்கனும் :) எப்படியும் நாம வாய் திறக்க மாட்டோம்

11. வாய்ல சனி உட்கார்ந்தா பலன் உடனே நிச்சயம். கருத்து கந்தசாமியா மதம்., இவர்களின் உடை, ஷேக் மவராசன், கலாச்சாரம் என நம்ம பிஸ்தை, காட்டலாம்.

12. நம்ம காலை, ஷூவை அவர்களை நோக்கி காட்டலாம். எதேச்சையா காட்டினாலும் பிறவிப்பயன் உண்டு. அவர்களை அவமானம் படுத்திய பெருமைக்கு ரிவார்ட்

13. அரபி இருக்கும் திசையில் நம் ஆவேச குரலில் பேசலாம்.

14. சைகையில் மிரட்டினாலும், நம்ம அண்ணன் விசயகாந்த் போல வாய சுலட்டி சுலட்டி காட்டினாலும், நடுவிரலை காட்டினாலும், ஆண்டவன் அணுகிரகத்தால் பிரியாணி கிட்டும்

15. பெர்முடாஸ் போட்டுக்கொண்டோ அல்லது பெண்கள் முட்டிக்கு மேல் ஸ்கர்ட் போட்டுக்கொண்டோ மால்களில் சுத்தலாம்

16. முஸ்லீம் அல்லாதவர்கள், அவர்களின் கோவிலுக்கு (மசூதி) செல்ல முற்படலாம். அல்லது குரான் புத்தகத்தை எடுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம்

17. ரம்ஜான் நோம்பு சமயத்தில், தண்ணீரோ, சிவிங் கம்மோ, அல்லது ஏதேனும் தின்பண்டம் சாப்பிடலாம்

18. இது நமக்கு ஒத்து வராது, இருந்தாலும் துணிந்த நவநாகரீக பெண்களுக்கு...... பீச்சில் டாட்லஸாகவோ, அல்லது பிகினி உடையிலோ ஒரு வாக் போகலாம்

19. முஸ்லீம் ஒருவர் சாமி கும்மிடும் போது, அவரை தாண்டி சென்றோ அல்லது அவர் முன் நின்று வெறிக்க பார்த்தாலும் பயன் கிட்டும்

20. அரபு வீட்டிற்கு போகும் போது, ஷூ காலோடு சென்று நம் ஏழரையை கூட்டிக்கலாம்

21. தண்ணியடித்துவிட்டு ’ஓஓஓஒ’ என நடுரோட்டில் கத்தலாம்

22. இது கஸ்டம் என கருதினால், ஒரு சிறிய சௌண்ட் விட்டால் கூட போதும்

23. அப்புறம் ரொம்ப ஈஸியா நேரா பிரியாணி தான் வேனும் என்றால், ஏர்போர்ட்டில் இருந்து செல்ல கசகசா, வெள்ளை பவுடர் போன்று எதாவது, டாக்டர் ஸ்லிப் இல்லாத மருந்துகள் என கொண்டுவரலாம்.

24. நம் குழந்தையையோ மனைவியையோ ஓங்கி அடித்து, பக்கத்து வீட்டுக்காரன் கூவினாக்கூட பலனை எதிர்பார்க்கலாம்

25. யாராக இருந்தாலும் ஒரு சிறிய ரத்தம் வர மாதிரி சண்டை, சச்சரவுக்கு காரணமாக இருந்தால் போதும்

26. ஜீப்ரா கிராஸிங்கில் ரோட்டை கடக்காமல், தேமே என்று நடுரோட்டில் ரோட் கிராஸ் செய்து நம் புண்ணியத்தை சோதிக்கலாம்

27. நம் குழந்தையை ரோட்டில் தவறவிட்டால் அல்லது எதேச்சையாக நம்மை அறியாமல் அவர்கள் ரோட்டை கடந்தால், பெற்றோருக்கு ஒரு வாரம் கேரண்டி (பேரண்டிங் கிளாஸ் உ ண்டு). unattended child at public place is punishable

28. மது அருந்திவிட்டு காரை தொட்டால், ஃபிஷ் பிரியாணி கேரண்டி

29. மதுவை வீட்டில் வைத்திருந்தாலும் இதே கதி தான்.

30. ஹோம் தியேட்டர் இருக்கே என்று, ஓவர் சௌண்ட் வைத்து பக்கத்து வீட்டுக்காரனை தூங்க விடாமல் செய்யலாம்

31. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட, ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டினால் நம்மை அங்கேயே வந்து அழைத்துச்செல்வார்கள்.

இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கு. இதை நான் ஜாலியாக சொன்னாலும் அனைத்தும் முக்கியமானதே...!!!

மேற்கூறியவையை கனவிலும் இங்கு முயலாதீர்கள். இவை எல்லாம் குற்றமாக கருதப்படுகிறது. நம்ம பொடனிக்கு பின்னாடி நிக்குறவன் மாதிரியே, உடனே வந்துவிடுவார்கள், இங்கு உள்ள காவல்துறையினர். அவர்களின் நேர்மை, சேவை பாரட்டத்தக்கது. அப்பாடா....!!!


இதே போல, புதிதாக வருபவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலைகள், இங்கிருக்கும் மாற்றங்கள்,  நாம் எதிர்கொள்ளூம் சிக்கலகள் என உங்கள் ஆதரவு இருப்பின் தொடர்கிறேன்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

Maryada Ramanna - Telegu Movie Review

மரியாதை ராமண்ணா - தெலுங்கு படம்

ஒரு மாறுதலுக்காக என்னை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த தெலுங்கு படம் உங்களுக்ககாக பகிர்கிறேன். இந்த படம் பார்க்க தூண்டும் முதல் காரணி, நம்ம ‘நான் ஈ’ பட புகழ் இயக்குனர் S.S. ராஜமௌலி 2010ல் இயக்கி வெளிவந்த படம். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் தான். ஒரு காமெடியான நடிகர் சுனிலை ஹீரோவாக்கி தெலுங்கில் கலக்கியெடுத்த படம்.

இப்படம் மராட்டி, பெங்காலி, சமீபத்தில் சன் ஆப் சர்தார் என ஹிந்தியில் ரீமேக்கிய படம். நம் நடிகர் விவேக் கூட , தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக கேள்விப்பட்டேன்.

கதையென்று பார்த்தால், அரதப்பழசான பலிக்கு பலி கதைதான். படத்தின் முதல் 10 நிமிடம் பார்த்தால், என்னடா இது....??? இதையா இவன் இப்படி சிலாகித்து எழுதினான் என என்னை காரி துப்புவீர்கள். அதே கிராமத்து குடும்ப தகராறு, மச்சான் மாப்பிள்ளை வெட்டு குத்து சண்டை, பகைக்கு பயந்து குழந்தையுடன் தாய் வெளியூருக்கு ஓட்டம், பின்பு ஹீரோவின் ஏழ்மை என அனைத்தும் கிளிஷே காட்சிகளாக இருக்கும்.

ஆனால் ஹீரோவான சுனில், கிராமத்தில் தனது அன்னைக்கு சொந்தமான ஒரு இடம் இருக்கு என தகவல் அறிந்தவுடன், அதை விற்று தன் ஏழ்மையை சிறிது போக்கிக்கொள்ளலாம் என ஊருக்கு கிளம்பும் போது ஆரம்பிக்குது சரவெடி.

தன் சொந்த ஊரான ராயலசீமா பகுதிக்கு 27 வருடம் கழித்து செல்கிறார். (ராயலசீமா என்பது நம் படத்தில் காட்டும் மதுரை போல, எதற்கெடுத்தாலும் கத்தி, வீச்சு, அரிவால் என் தெலுங்கில் ஃபேமஸ்). அங்கு தன் தம்பியை கொன்ற குடும்பத்தை வேருடன் அறுத்து பலி வாங்க 27 வருடம் காத்திருக்கும் ஊர் பெரியவரான வில்லனனிடமே (Nagineedu) போய் நிலம் விற்க உதவி கேட்டு, அவர் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது இருந்து நம் வயிறு பதம் பார்க்க ஆரம்பித்துவிடும்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரே ஒரு வீடு, மொத்த படத்தையும் சிறிதும் போர் அடிக்காமல் நகர்த்த செம சாமர்த்தியம் வேண்டும். அதை அலாட்டாக செய்து ஜெயித்தார்கள்.

வில்லனுக்கு ஒரு பிரத்தேக குணமுண்டு. தன் வீட்டிற்கு எதிரியே வந்தாலும், நன்கு உபசரித்து வாயார புகழுமாறு உபசரிப்பார். வீட்டின் வாசப்படியை தாண்டியவுடன் தான் அருவாளை எடுப்பார். இதை ஹீரோ தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் அடிக்கும் கூத்துக்கள் தான் முழுப்படமே.


தான் இத்தனை வருடம் காத்திருப்பது நம் வீட்டில் இருப்பருக்கு தான் என வில்லனுக்கு தெரிந்தபின், இந்த இருவர் விளையாடும் Cat and Mouse விளையாட்டே முழுப்படமும். இதில் ஹீரோ வெளியேறாமல் இருக்க செய்யும் சேட்டைகள், அதனால் வில்லன் பெண் தன்னுடன் காதல், அதில் ஏற்படும் கலாட்டா, விடாப்பிடியா வீட்டின் உள்ளேயே சாக்கு போக்கு சொல்லி தங்கும் ஹீரோவின் சாமர்த்தியம், வில்லன், வில்லனின் மகன்கள் இவரை வெளியே செல்ல வைக்கும் செயல்கள் என அனைத்தும் செம காமெடி. ஒரு முழுநீல ஆக்‌ஷன் பட ஸ்கோப் இருந்தும் அதை அப்படியே உல்டா செய்து ஜெயித்த படம்.

அனைவரின் நடிப்பும் அவ்வளவு அருமை. குறிப்பாக அந்த வயதான வில்லன் தான் என்னை மிகவும் கவர்ந்தவர். என்னா ஒரு மாடுலேஷன், பாடி லேங்குவேஜ், சூப்பர் நடிப்பு.....இப்படம் ஆந்திர அரசின் (2010) சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், சிறந்த வில்லன் நடிப்பிற்கும், சிறந்த பாடகர், சிறப்பு நடுவர் விருது என நான்கு விருதுகளை அள்ளியது.

நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். கண்டிப்பாக பாருங்கள்.

வியாழன், 6 டிசம்பர், 2012

Indian Rupee - Malayalam Moview Review

எனது பார்வையில் இந்தியன் ரூபீ - மலையாள படம்

நமது நாட்டில் கொடிக்கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் தொழிலை பின்பிலமாக கொண்ட படம். 

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இதை கதைக்களமாக கொண்டு ஒரு முழுப்படத்தை எடுக்க முடியுமா? நினைத்து பார்த்தால், மலைப்பே மிஞ்சும். இதை வெற்றியாக்கியதில் தான் இயக்குனரின் சாமர்த்தியம், திறமையுள்ளது. வெறும் வெற்றியோடு நில்லாமல், அந்த ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகரின் விருது பிரித்விராஜ்க்கும், பிராந்திய மொழிப் பிரிவில் தேசிய விருதும் பெற்றத்தந்த அருமையான படம்.


மிகவும் எதார்த்தமான நேர்த்தியான திரைக்கதை. ஸ்கூல் டிராப்-அவுடான பிரித்விராஜூம் அவர் நண்பரும் கோழிக்கோட்டில் ஒரு பெரும் ரியல் எஸ்டேட்டின் சப்-பிரோக்கராக இருப்பவர்கள். நாமும் வெகுவிரைவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக ஆவோம் என பெரும் கனவுகளுடன் இருக்கும் நம்மை போல ஒரு சராசரி இளைஞன். ஆனால் நிஜத்தில் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கும் ஆள்.

ஒரு திணிக்கப்பட்ட காட்சி, டிவிஸ்டும் இல்லாத படம். தெளிந்த நீரோடையாக அதன் போக்கிலேயே பயனிக்கும் திரைக்கதை. சிறு பிரோக்கர்கள் சந்த்திக்கும் தொழில் போட்டி, அவ்வூரில் இருக்கும் பெரும் முதலையுடன் நடக்கும் உள்குத்துக்கள், அவர்களை மீறி ஏதும் செய்ய முடியா இயலாமை, அவர்களின் ஆதிக்கம் என நாம் நிஜத்தில் பார்க்கும் அத்தனை விஷயமும் அச்சுஅசலாக நம் கண்முன்னே விரிகிறது.  நிச்சயம், அட ஆமாம்ல என போட வைக்கும்.

திலகன், இவர்களிடத்தில் தன் சொத்தை விற்க அணுகும்போது படம் சூடுப்பிடிக்கிறது. தன்னுடைய நிலம், கடைசி நேர சட்டசிக்களால் விற்க முடியாமல் போனாலும், இவர்களுடன் ஏற்படும் நட்பால் பிரித்விராஜுடனே தங்குகிறார். மேலும் திலகன் தரும் டிப்ஸ்களால், இவர்கள் தொழிலில் அடையும் முன்னேற்றம் என அத்தனையும் சுவாரஸ்யம். 



வித்தியாசமான குணம் கொண்ட ஜெகதி ஷாப்பிங் மால் கட்டி விற்பவர். அவரிடம் ஷாப்பிங் மாலை தனக்கென (பவர்) வாங்கி, கைமாற்றி காசு பார்க்க துடிக்கும் துடிப்பும், அதற்கான தான் மற்றும் தன் கூட்டாளி,  திலகன் மேற்கொள்ளும் யுத்திகளும் தான் படம்.

நான் இந்த படம் பார்த்து ஏறக்குறைய 3-4 மாதங்களாகிவிட்டது. இன்னும் என்னில் அதன் தாக்கும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இறுதியில் வரும் டிவிஸ்ட்கள் அருமையோ அருமை. அவ்வளவு இயல்பாக கதையில் பொருந்துகிறது. அது என்னவென்று சொன்னால் சுவாரஸ்யம் போய்விடுமாதலால் கூறவில்லை. நீங்களே கண்டு மகுழுங்கள்.

வர வர திலகன் மேல் தீரா காதல் வந்துவிடும் போல எனக்கு. என்னா ஒரு பிறவி நடிகன்யா...!!!! நாம் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவரைப்பற்றி சொல்லும்போதே ஒரு பூரிப்படைகிறேன். வர்ணிக்க வார்த்தையே இல்லை. சிவாஜியை அசால்ட்டா தூக்கி ஏப்பம் விட்டிருவார் மனுஷன்...!! ஒரு துளிக்கூட நடிக்கிறார் என்று நாம் உணரவே மாட்டோம், அப்படியான ஒரு திறமை. இவர் மறைந்தாலும், இவர் புகழ் என்றும் அழியப்போவதில்லை.


 கண்டிப்பாக பாருங்கள் என பரிந்துரைக்கிறேன். படத்தின் இறுதியில் நீங்களும், இதன் நிதர்சனத்தை உணர்வீர்கள். ஏன் இப்படி ஒரு கிளைமாக்ஸ் என்பதை மனதார ஒத்துக்கொள்வீர்கள்.