’அரபிகதா’ – மலையாளப் படம்
- நம் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம்.
- நம் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம்.
உண்மையில் இப்படக்கரு
கேரளாவில் கம்யூனிசம் எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்னும் உட்கருத்தை
அடிப்படையாக வைத்து பகடியாக எடுத்தது. கம்யூனிஸ்டு தலைமை எளிய மக்களுக்காக
பாடுபடாமல், ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் எந்த சித்தாந்தமும் இல்லாமல், சமூக அக்கறையில்லாததை
’Under Current’ ஆக எடுத்துரைக்கும் படம். தமிழ்நாட்டிற்கும் கம்யூனிசயத்திற்கும்
பல கிலோ மீட்டர் தூரம், படத்தை நான் அனுபவித்த பார்வையில் தருகிறேன்.
இந்த படத்திற்கு போகும் முன் ஒரு ஃபிலாஷ்பேக். நான் துபாய் செல்கிறேன் என்றவுடன்
ஒட்டகம் மேய்க்கவா? என்று நக்கலாக கேட்டவர் உண்டு. துபாய் ஒருச்சாராருக்கு சொர்க்க
பூமி, மற்றவருக்கோ இது ஒரு பூலோக நரகம். இங்கு வந்த புதிதில், துபாய் அப்படிப்பட்ட
ஊரில்லையே என்று வியந்தேன். பிறகு ஏன், நம்ம ஊரில் அப்படி ஒரு மாயத்தோற்றம்
இருக்கு என ஆராய்ந்தேன். அதன் தொடர்ச்சியாக இங்கு வாழும் ’கூலி ஆட்கள் (Labour Category)’ ஆட்களின் சூழ்நிலையும், சம்பளமும்,
அவர்கள் வாழ்க்கை முறையும், இங்கு எவ்வாறு அகப்பட்டார்கள் என்பதைக் கண்டு அதிர்ந்து
போனேன். இப்படம் அச்சு அசலாக
அவர்கள் வாழ்க்கையைப்பற்றி பொட்டில் அடித்தாற்போல சொல்லும் படம்.
இனி படத்திற்கு செல்வோம். நடிகர் ‘ஸ்ரீநிவாஸன்’ என்றாலே நல்ல கதையில் மட்டுமே நடிப்பார் என்று மலையாலத்தில் ஒரு தனி இமேஜ் உண்டு.. அதற்கேட்டாற்போல் அவர் நடித்த எல்லா படமும் நல்ல ஹிட்கள் தான். இதுவும் அந்த வரிசையில் ஒரு முத்து.
தன் வாழ்க்கையே கட்சிக்கும், மக்களுக்கும் அர்பணித்து கம்யூனிஸ சித்தாந்த கோட்பாடைக்கொண்ட கூபா முகந்தன், இடதுசாரி கம்யூனிஸ கட்சியை சேர்ந்த அதிதீவிர விஸ்வாசி. தன் செம்மனூர் ஊர் (கண்ணூர் மாவட்டம்) மக்களுக்கு எதுவெனினும் முன்னின்று போராட்டம் நடத்துபவர். இவரை ஓரம்கட்டிவிட்டு ஊழல் பேர்வழியான கருணானன் என்பவர் முன்னுக்கு வர துடிக்கிறார். இதே கிராமத்தில் ஒரு தோல் தொழிற்சாலை தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஜெகதீயை எதிர்த்து மக்களுக்காக போராட்டம் நடத்தி தடுக்கிறார். இவ்விருவரும் சூழ்ச்சை செய்து முகுந்தனை கடனில் சிக்கவைத்து, அதை அடைக்க சூழ்நிலை நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களின் குறை போக்கவும், அங்கு கம்யூனிஸத்தை கோலோச்சனும் உதவும் என ஏமாற்றி அனுப்பி வைக்கிறார்கள். இது ஏதோ கட்சிப்படம் என ஒதுக்கிவிடாதீர்கள். இது படத்தின் சிறுபகுதி தான்
ஸ்ரீநிவஸன் துபாய் வந்தவுடன், இங்கு அவரை வேலை வாங்கும் விதமும், அங்கு குறை கேட்டு தன் அப்பாவிதனத்தை காண்பிக்கும் விதம் செம்ம... அவ்வளவு ரகலையாக இருக்கும். தன்னை இப்படி பிழியும் முதலாளியை கண்டு தங்களின் கோரிக்கை பற்றி பேசலாம் என நினைத்தவருக்கு, அது அதிர்ச்சி. கம்யூனிஸ்ட்டான ’ஜெகதீ’ தான் முதலாளி என அறியும் போது பேரதிர்ச்சி. ஜெகதீ தன் நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டி, அவர் மட்டும் சொகுசாக வாழ்கிறார். சில நாட்களில் தான் ஏமாற்றப்பட்டோம், சூழ்ச்சியில் வீழ்ந்தோம் என உணர்ந்து வேலையை துறக்கிறார். ஆனால் கம்யூனிஸத்தை விடவில்லை.
நல்ல வேலையில்லாதலால் தான் அனுபவிக்கும் கொடுமை, வறுமை, கடன் சுமையால் ஊருக்கு செல்ல முடியாத இயலாமை, அதன் காரணமாக கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும் நிலை என இங்கிருக்கும் உண்மை நிலையை அப்படியே அப்பட்டமாக கதையாக விரிகிறது. இது வெறும் அழுகாச்சு படமும் அல்ல. ஸ்ரீநிவாசனுக்கே உரிய நிறைய நகைச்சுவை காட்சிகளும் உண்டு. ஒரு சீனப்பெண்ணை கண்டவுடன் கம்யூனிச நாடு என்ற ஈர்ப்பில் மொழி தெரியாவிட்டாலும் அவரிடம் நட்புக்கொள்ள முயற்சி, பின்பு அதுவே மெல்லிய காதலாக மாறும் தருணம் என தென்றலாக கதை செல்லும். சீன பெண் கம்யூனிசத்திற்கு எதிரானவள், தன் காதலன் விடுதலைக்குதான் அவள் துபாய் வந்தாள் என அறிந்தவுடன், கம்யூனிச சிந்தாதப்படி தன் அத்தியாவசிய தேவைக்கு போக மீதி அனைத்தும் கஸ்டப்படும் மக்களுக்கே என தான் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை அப்பெண்ணிற்கு கொடுப்பார்.
பல வருட இன்னல்களுக்கு இடையே இறுதியில், தன் செம்மனூர் நண்பர்கள் உதவியுடன் இந்த
போலி கம்யூனிஸ்ட்டுகளை (ஊழல் தலைமை கருனான்ன், தொழிலதிபர் ஜெகதீ, இவர்களின்
கூட்டுச்சதி, ஏமாற்றியவர்கள்) என நாட்டிற்கு அடையாளம் காட்டிவிட்டு, தன்
உயிர்மூச்சான கம்யூனிசத்திற்கும், நாட்டிற்கும், தன் மக்களுக்கும் பாடுபட மீண்டும்
ஊருக்கு திரும்புவார்.
மலையாளத்தில் துபாய் பற்றிய கதையைக்கொண்டு மம்முட்டி, மோகன்லால் என பலர் நடித்தும், நிறைய சினிமா தோல்வியடைந்துள்ளது. ஏனெனில் அவையெல்லாம் வெறும் ஆடம்பரமாக, சொர்க்க பூமியாக மட்டுமே காண்பிக்கப்பட்டது. எதார்த்த சினிமாவாக இல்லை.
அரபு தேசத்தில் வாழ்பவர்கள், இப்படத்தை காண நேரிட்டால், கண்களில் நீர்கோர்க்கும்
என்பது உறுதி. வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு, இப்படம் தமிழ் நாவலான ‘ஆடு ஜீவிதம்’ மனதில் வருவதை தவிற்க முடியாதது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக