வியாழன், 3 ஜனவரி, 2013

Arabikatha - Malayalam Movie Review


அரபிகதா மலையாளப் படம்
- நம் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படம். 


உண்மையில் இப்படக்கரு கேரளாவில் கம்யூனிசம் எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்னும் உட்கருத்தை அடிப்படையாக வைத்து பகடியாக எடுத்தது. கம்யூனிஸ்டு தலைமை எளிய மக்களுக்காக பாடுபடாமல், ஊழல் நிறைந்த தலைமையின் கீழ் எந்த சித்தாந்தமும் இல்லாமல், சமூக அக்கறையில்லாததை ’Under Currentஆக எடுத்துரைக்கும் படம். தமிழ்நாட்டிற்கும் கம்யூனிசயத்திற்கும் பல கிலோ மீட்டர் தூரம், படத்தை நான் அனுபவித்த பார்வையில் தருகிறேன். 


இந்த படத்திற்கு போகும் முன் ஒரு ஃபிலாஷ்பேக். நான் துபாய் செல்கிறேன் என்றவுடன் ஒட்டகம் மேய்க்கவா? என்று நக்கலாக கேட்டவர் உண்டு. துபாய் ஒருச்சாராருக்கு சொர்க்க பூமி, மற்றவருக்கோ இது ஒரு பூலோக நரகம். இங்கு வந்த புதிதில், துபாய் அப்படிப்பட்ட ஊரில்லையே என்று வியந்தேன். பிறகு ஏன், நம்ம ஊரில் அப்படி ஒரு மாயத்தோற்றம் இருக்கு என ஆராய்ந்தேன். அதன் தொடர்ச்சியாக இங்கு வாழும் கூலி ஆட்கள் (Labour Category)ஆட்களின் சூழ்நிலையும், சம்பளமும், அவர்கள் வாழ்க்கை முறையும், இங்கு எவ்வாறு அகப்பட்டார்கள் என்பதைக் கண்டு அதிர்ந்து போனேன். இப்படம் அச்சு அசலாக அவர்கள் வாழ்க்கையைப்பற்றி பொட்டில் அடித்தாற்போல சொல்லும் படம்.


இனி படத்திற்கு செல்வோம். நடிகர் ‘ஸ்ரீநிவாஸன்என்றாலே நல்ல கதையில் மட்டுமே நடிப்பார் என்று மலையாலத்தில் ஒரு தனி இமேஜ் உண்டு.. அதற்கேட்டாற்போல் அவர் நடித்த எல்லா படமும் நல்ல ஹிட்கள் தான். இதுவும் அந்த வரிசையில் ஒரு முத்து.

தன் வாழ்க்கையே கட்சிக்கும், மக்களுக்கும் அர்பணித்து கம்யூனிஸ சித்தாந்த கோட்பாடைக்கொண்ட கூபா முகந்தன், இடதுசாரி கம்யூனிஸ கட்சியை சேர்ந்த அதிதீவிர விஸ்வாசி. தன் செம்மனூர் ஊர் (கண்ணூர் மாவட்டம்) மக்களுக்கு எதுவெனினும் முன்னின்று போராட்டம் நடத்துபவர். இவரை ஓரம்கட்டிவிட்டு ஊழல் பேர்வழியான கருணானன் என்பவர் முன்னுக்கு வர துடிக்கிறார். இதே கிராமத்தில் ஒரு தோல் தொழிற்சாலை தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஜெகதீயை எதிர்த்து மக்களுக்காக போராட்டம் நடத்தி தடுக்கிறார். இவ்விருவரும் சூழ்ச்சை செய்து முகுந்தனை கடனில் சிக்கவைத்து, அதை அடைக்க சூழ்நிலை நிர்பந்தம் காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களின் குறை போக்கவும், அங்கு கம்யூனிஸத்தை கோலோச்சனும் உதவும் என ஏமாற்றி அனுப்பி வைக்கிறார்கள். இது ஏதோ கட்சிப்படம் என ஒதுக்கிவிடாதீர்கள். இது படத்தின் சிறுபகுதி தான்


ஸ்ரீநிவஸன் துபாய் வந்தவுடன், இங்கு அவரை வேலை வாங்கும் விதமும், அங்கு குறை கேட்டு தன் அப்பாவிதனத்தை காண்பிக்கும் விதம் செம்ம... அவ்வளவு ரகலையாக இருக்கும். தன்னை இப்படி பிழியும் முதலாளியை கண்டு தங்களின் கோரிக்கை பற்றி பேசலாம் என நினைத்தவருக்கு, அது அதிர்ச்சி. கம்யூனிஸ்ட்டான ஜெகதீதான் முதலாளி என அறியும் போது பேரதிர்ச்சி. ஜெகதீ தன் நாட்டு மக்களின் உழைப்பை சுரண்டி, அவர் மட்டும் சொகுசாக வாழ்கிறார். சில நாட்களில் தான் ஏமாற்றப்பட்டோம், சூழ்ச்சியில் வீழ்ந்தோம் என உணர்ந்து வேலையை துறக்கிறார். ஆனால் கம்யூனிஸத்தை விடவில்லை.


நல்ல வேலையில்லாதலால் தான் அனுபவிக்கும் கொடுமை, வறுமை, கடன் சுமையால் ஊருக்கு செல்ல முடியாத இயலாமை, அதன் காரணமாக கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும் நிலை என இங்கிருக்கும் உண்மை நிலையை அப்படியே அப்பட்டமாக கதையாக விரிகிறது. இது வெறும் அழுகாச்சு படமும் அல்ல. ஸ்ரீநிவாசனுக்கே உரிய நிறைய நகைச்சுவை காட்சிகளும் உண்டு. ஒரு சீனப்பெண்ணை கண்டவுடன் கம்யூனிச நாடு என்ற ஈர்ப்பில் மொழி தெரியாவிட்டாலும் அவரிடம் நட்புக்கொள்ள முயற்சி, பின்பு அதுவே மெல்லிய காதலாக மாறும் தருணம் என தென்றலாக கதை செல்லும். சீன பெண் கம்யூனிசத்திற்கு எதிரானவள், தன் காதலன் விடுதலைக்குதான் அவள் துபாய் வந்தாள் என அறிந்தவுடன், கம்யூனிச சிந்தாதப்படி தன் அத்தியாவசிய தேவைக்கு போக மீதி அனைத்தும் கஸ்டப்படும் மக்களுக்கே என தான் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை அப்பெண்ணிற்கு கொடுப்பார்.


பல வருட இன்னல்களுக்கு இடையே இறுதியில், தன் செம்மனூர் நண்பர்கள் உதவியுடன் இந்த போலி கம்யூனிஸ்ட்டுகளை (ஊழல் தலைமை கருனான்ன், தொழிலதிபர் ஜெகதீ, இவர்களின் கூட்டுச்சதி, ஏமாற்றியவர்கள்) என நாட்டிற்கு அடையாளம் காட்டிவிட்டு, தன் உயிர்மூச்சான கம்யூனிசத்திற்கும், நாட்டிற்கும், தன் மக்களுக்கும் பாடுபட மீண்டும் ஊருக்கு திரும்புவார். 


மலையாளத்தில் துபாய் பற்றிய கதையைக்கொண்டு மம்முட்டி, மோகன்லால் என பலர் நடித்தும், நிறைய சினிமா தோல்வியடைந்துள்ளது. ஏனெனில் அவையெல்லாம் வெறும் ஆடம்பரமாக, சொர்க்க பூமியாக மட்டுமே காண்பிக்கப்பட்டது. எதார்த்த சினிமாவாக இல்லை.

அரபு தேசத்தில் வாழ்பவர்கள், இப்படத்தை காண நேரிட்டால், கண்களில் நீர்கோர்க்கும் என்பது உறுதி. வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு, இப்படம் தமிழ் நாவலான ‘ஆடு ஜீவிதம்மனதில் வருவதை தவிற்க முடியாதது.

வியாழன், 13 டிசம்பர், 2012

கண்ணா..!!! துபாயில் ஃபிஷ் பிரியாணி திங்க ஆசையா..!!

அரபு தேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்த தலைப்பின் வசீகரம் தெரியும். ஒரு புன்முறுவலோடு அடப்பாவி, எந்த ஆடு சிக்கப்போகுதோ என மனதில் நினைத்துக்கொள்வார்கள்.

ஏன் இந்த தலைப்பு என்று புரியாதவர்களுக்கு, சிறிய விளக்கம் இதோ!

நம் ஊரில் மாமியார் வீட்டிற்கு போகனுமா என்பதை தான் இங்கு ஃபிஷ் பிரியாணி திங்க போறியா என கேட்பது... :) :) :)


 துபாய், சொர்க்க பூமி என்பதில் மாற்று கருத்தேதும் இல்லை. நிறைய சுதந்திரம் நிச்சயம் இருக்கு, அடுத்தவரை சீண்டாத வரையிலும்.  சரி, சட்டுபுட்டுன்னு விஷயத்திற்கு வருவோம். இங்கு இலவசமாக ஃபிஷ் (மீன்) பிரியாணி திங்க ஆசைப்படும் நபர்கள், தவறாமல் செய்ய வேண்டியவைகள் கீழே...!!

குறிப்பு : பின்விளைவுகளுக்கு, என்ற கம்பேனி பொறுப்பல்ல...

1. இங்கு பெண்களே உயர்ந்தவர்கள். அனைத்து ஆண்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆதலால் அவங்களை முதலில் திட்டிவிடுங்கள். உடனே பிரியாணி கேரண்டி

2. ’For Ladies Only' என்று போர்ட் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு என்ன இருக்கு என ஆராயலாம்

3. ஒரு ஃபிகரை, பெண்ணை வெறிச்சு பார்த்தா போதும்

4. லிஃப்டில் பெண் தனியாக செல்லும் போது, அதில் நாமும் பயணிக்கலாம். குறிப்பாக அரபி பெண் இருக்கும் லிஃப்ட் என்றால் சாலச்சிறந்தது. :)

5. அரபி பெண்களுடன் முதலில் முந்திரி கொட்டைத்தனமாக கைக்குலுக்குவது, பயன் தரக்கூடும்

6. அரபியை தொட்டு பேசுவது, யாராக இருந்தாலும்... 

7. ரோட்டில் எவன் சட்டையையோ பிடித்து டேய், நீ என்ன பெரிய பாடா என கேட்கலாம்

8. பொதுவில் கிஸ் அடித்தால், நம் மாமன் உடனே வருவான்

9. ச்சே, எப்படி பப்லிக்கில் கிஸ் அடிப்பது என தயக்கம் என்றால், கட்டிப்பிடித்தாலும் விமோச்சனம் உண்டு. குறிப்பு  - உங்க காதலி, மனைவியா இருந்தாலும் டீலிங் இதே தான்

10.  கில்மா மேட்டர் செய்து ஃபிஷ் பிரியாணி ருஷியை அறியலாம். ஆனால், இதற்கு அடுத்த ஆள் போட்டுக்கொடுக்கனும் :) எப்படியும் நாம வாய் திறக்க மாட்டோம்

11. வாய்ல சனி உட்கார்ந்தா பலன் உடனே நிச்சயம். கருத்து கந்தசாமியா மதம்., இவர்களின் உடை, ஷேக் மவராசன், கலாச்சாரம் என நம்ம பிஸ்தை, காட்டலாம்.

12. நம்ம காலை, ஷூவை அவர்களை நோக்கி காட்டலாம். எதேச்சையா காட்டினாலும் பிறவிப்பயன் உண்டு. அவர்களை அவமானம் படுத்திய பெருமைக்கு ரிவார்ட்

13. அரபி இருக்கும் திசையில் நம் ஆவேச குரலில் பேசலாம்.

14. சைகையில் மிரட்டினாலும், நம்ம அண்ணன் விசயகாந்த் போல வாய சுலட்டி சுலட்டி காட்டினாலும், நடுவிரலை காட்டினாலும், ஆண்டவன் அணுகிரகத்தால் பிரியாணி கிட்டும்

15. பெர்முடாஸ் போட்டுக்கொண்டோ அல்லது பெண்கள் முட்டிக்கு மேல் ஸ்கர்ட் போட்டுக்கொண்டோ மால்களில் சுத்தலாம்

16. முஸ்லீம் அல்லாதவர்கள், அவர்களின் கோவிலுக்கு (மசூதி) செல்ல முற்படலாம். அல்லது குரான் புத்தகத்தை எடுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம்

17. ரம்ஜான் நோம்பு சமயத்தில், தண்ணீரோ, சிவிங் கம்மோ, அல்லது ஏதேனும் தின்பண்டம் சாப்பிடலாம்

18. இது நமக்கு ஒத்து வராது, இருந்தாலும் துணிந்த நவநாகரீக பெண்களுக்கு...... பீச்சில் டாட்லஸாகவோ, அல்லது பிகினி உடையிலோ ஒரு வாக் போகலாம்

19. முஸ்லீம் ஒருவர் சாமி கும்மிடும் போது, அவரை தாண்டி சென்றோ அல்லது அவர் முன் நின்று வெறிக்க பார்த்தாலும் பயன் கிட்டும்

20. அரபு வீட்டிற்கு போகும் போது, ஷூ காலோடு சென்று நம் ஏழரையை கூட்டிக்கலாம்

21. தண்ணியடித்துவிட்டு ’ஓஓஓஒ’ என நடுரோட்டில் கத்தலாம்

22. இது கஸ்டம் என கருதினால், ஒரு சிறிய சௌண்ட் விட்டால் கூட போதும்

23. அப்புறம் ரொம்ப ஈஸியா நேரா பிரியாணி தான் வேனும் என்றால், ஏர்போர்ட்டில் இருந்து செல்ல கசகசா, வெள்ளை பவுடர் போன்று எதாவது, டாக்டர் ஸ்லிப் இல்லாத மருந்துகள் என கொண்டுவரலாம்.

24. நம் குழந்தையையோ மனைவியையோ ஓங்கி அடித்து, பக்கத்து வீட்டுக்காரன் கூவினாக்கூட பலனை எதிர்பார்க்கலாம்

25. யாராக இருந்தாலும் ஒரு சிறிய ரத்தம் வர மாதிரி சண்டை, சச்சரவுக்கு காரணமாக இருந்தால் போதும்

26. ஜீப்ரா கிராஸிங்கில் ரோட்டை கடக்காமல், தேமே என்று நடுரோட்டில் ரோட் கிராஸ் செய்து நம் புண்ணியத்தை சோதிக்கலாம்

27. நம் குழந்தையை ரோட்டில் தவறவிட்டால் அல்லது எதேச்சையாக நம்மை அறியாமல் அவர்கள் ரோட்டை கடந்தால், பெற்றோருக்கு ஒரு வாரம் கேரண்டி (பேரண்டிங் கிளாஸ் உ ண்டு). unattended child at public place is punishable

28. மது அருந்திவிட்டு காரை தொட்டால், ஃபிஷ் பிரியாணி கேரண்டி

29. மதுவை வீட்டில் வைத்திருந்தாலும் இதே கதி தான்.

30. ஹோம் தியேட்டர் இருக்கே என்று, ஓவர் சௌண்ட் வைத்து பக்கத்து வீட்டுக்காரனை தூங்க விடாமல் செய்யலாம்

31. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட, ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டினால் நம்மை அங்கேயே வந்து அழைத்துச்செல்வார்கள்.

இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கு. இதை நான் ஜாலியாக சொன்னாலும் அனைத்தும் முக்கியமானதே...!!!

மேற்கூறியவையை கனவிலும் இங்கு முயலாதீர்கள். இவை எல்லாம் குற்றமாக கருதப்படுகிறது. நம்ம பொடனிக்கு பின்னாடி நிக்குறவன் மாதிரியே, உடனே வந்துவிடுவார்கள், இங்கு உள்ள காவல்துறையினர். அவர்களின் நேர்மை, சேவை பாரட்டத்தக்கது. அப்பாடா....!!!


இதே போல, புதிதாக வருபவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலைகள், இங்கிருக்கும் மாற்றங்கள்,  நாம் எதிர்கொள்ளூம் சிக்கலகள் என உங்கள் ஆதரவு இருப்பின் தொடர்கிறேன்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

Maryada Ramanna - Telegu Movie Review

மரியாதை ராமண்ணா - தெலுங்கு படம்

ஒரு மாறுதலுக்காக என்னை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த தெலுங்கு படம் உங்களுக்ககாக பகிர்கிறேன். இந்த படம் பார்க்க தூண்டும் முதல் காரணி, நம்ம ‘நான் ஈ’ பட புகழ் இயக்குனர் S.S. ராஜமௌலி 2010ல் இயக்கி வெளிவந்த படம். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் தான். ஒரு காமெடியான நடிகர் சுனிலை ஹீரோவாக்கி தெலுங்கில் கலக்கியெடுத்த படம்.

இப்படம் மராட்டி, பெங்காலி, சமீபத்தில் சன் ஆப் சர்தார் என ஹிந்தியில் ரீமேக்கிய படம். நம் நடிகர் விவேக் கூட , தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக கேள்விப்பட்டேன்.

கதையென்று பார்த்தால், அரதப்பழசான பலிக்கு பலி கதைதான். படத்தின் முதல் 10 நிமிடம் பார்த்தால், என்னடா இது....??? இதையா இவன் இப்படி சிலாகித்து எழுதினான் என என்னை காரி துப்புவீர்கள். அதே கிராமத்து குடும்ப தகராறு, மச்சான் மாப்பிள்ளை வெட்டு குத்து சண்டை, பகைக்கு பயந்து குழந்தையுடன் தாய் வெளியூருக்கு ஓட்டம், பின்பு ஹீரோவின் ஏழ்மை என அனைத்தும் கிளிஷே காட்சிகளாக இருக்கும்.

ஆனால் ஹீரோவான சுனில், கிராமத்தில் தனது அன்னைக்கு சொந்தமான ஒரு இடம் இருக்கு என தகவல் அறிந்தவுடன், அதை விற்று தன் ஏழ்மையை சிறிது போக்கிக்கொள்ளலாம் என ஊருக்கு கிளம்பும் போது ஆரம்பிக்குது சரவெடி.

தன் சொந்த ஊரான ராயலசீமா பகுதிக்கு 27 வருடம் கழித்து செல்கிறார். (ராயலசீமா என்பது நம் படத்தில் காட்டும் மதுரை போல, எதற்கெடுத்தாலும் கத்தி, வீச்சு, அரிவால் என் தெலுங்கில் ஃபேமஸ்). அங்கு தன் தம்பியை கொன்ற குடும்பத்தை வேருடன் அறுத்து பலி வாங்க 27 வருடம் காத்திருக்கும் ஊர் பெரியவரான வில்லனனிடமே (Nagineedu) போய் நிலம் விற்க உதவி கேட்டு, அவர் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது இருந்து நம் வயிறு பதம் பார்க்க ஆரம்பித்துவிடும்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரே ஒரு வீடு, மொத்த படத்தையும் சிறிதும் போர் அடிக்காமல் நகர்த்த செம சாமர்த்தியம் வேண்டும். அதை அலாட்டாக செய்து ஜெயித்தார்கள்.

வில்லனுக்கு ஒரு பிரத்தேக குணமுண்டு. தன் வீட்டிற்கு எதிரியே வந்தாலும், நன்கு உபசரித்து வாயார புகழுமாறு உபசரிப்பார். வீட்டின் வாசப்படியை தாண்டியவுடன் தான் அருவாளை எடுப்பார். இதை ஹீரோ தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் அடிக்கும் கூத்துக்கள் தான் முழுப்படமே.


தான் இத்தனை வருடம் காத்திருப்பது நம் வீட்டில் இருப்பருக்கு தான் என வில்லனுக்கு தெரிந்தபின், இந்த இருவர் விளையாடும் Cat and Mouse விளையாட்டே முழுப்படமும். இதில் ஹீரோ வெளியேறாமல் இருக்க செய்யும் சேட்டைகள், அதனால் வில்லன் பெண் தன்னுடன் காதல், அதில் ஏற்படும் கலாட்டா, விடாப்பிடியா வீட்டின் உள்ளேயே சாக்கு போக்கு சொல்லி தங்கும் ஹீரோவின் சாமர்த்தியம், வில்லன், வில்லனின் மகன்கள் இவரை வெளியே செல்ல வைக்கும் செயல்கள் என அனைத்தும் செம காமெடி. ஒரு முழுநீல ஆக்‌ஷன் பட ஸ்கோப் இருந்தும் அதை அப்படியே உல்டா செய்து ஜெயித்த படம்.

அனைவரின் நடிப்பும் அவ்வளவு அருமை. குறிப்பாக அந்த வயதான வில்லன் தான் என்னை மிகவும் கவர்ந்தவர். என்னா ஒரு மாடுலேஷன், பாடி லேங்குவேஜ், சூப்பர் நடிப்பு.....இப்படம் ஆந்திர அரசின் (2010) சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், சிறந்த வில்லன் நடிப்பிற்கும், சிறந்த பாடகர், சிறப்பு நடுவர் விருது என நான்கு விருதுகளை அள்ளியது.

நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். கண்டிப்பாக பாருங்கள்.

வியாழன், 6 டிசம்பர், 2012

Indian Rupee - Malayalam Moview Review

எனது பார்வையில் இந்தியன் ரூபீ - மலையாள படம்

நமது நாட்டில் கொடிக்கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் தொழிலை பின்பிலமாக கொண்ட படம். 

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இதை கதைக்களமாக கொண்டு ஒரு முழுப்படத்தை எடுக்க முடியுமா? நினைத்து பார்த்தால், மலைப்பே மிஞ்சும். இதை வெற்றியாக்கியதில் தான் இயக்குனரின் சாமர்த்தியம், திறமையுள்ளது. வெறும் வெற்றியோடு நில்லாமல், அந்த ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகரின் விருது பிரித்விராஜ்க்கும், பிராந்திய மொழிப் பிரிவில் தேசிய விருதும் பெற்றத்தந்த அருமையான படம்.


மிகவும் எதார்த்தமான நேர்த்தியான திரைக்கதை. ஸ்கூல் டிராப்-அவுடான பிரித்விராஜூம் அவர் நண்பரும் கோழிக்கோட்டில் ஒரு பெரும் ரியல் எஸ்டேட்டின் சப்-பிரோக்கராக இருப்பவர்கள். நாமும் வெகுவிரைவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக ஆவோம் என பெரும் கனவுகளுடன் இருக்கும் நம்மை போல ஒரு சராசரி இளைஞன். ஆனால் நிஜத்தில் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கும் ஆள்.

ஒரு திணிக்கப்பட்ட காட்சி, டிவிஸ்டும் இல்லாத படம். தெளிந்த நீரோடையாக அதன் போக்கிலேயே பயனிக்கும் திரைக்கதை. சிறு பிரோக்கர்கள் சந்த்திக்கும் தொழில் போட்டி, அவ்வூரில் இருக்கும் பெரும் முதலையுடன் நடக்கும் உள்குத்துக்கள், அவர்களை மீறி ஏதும் செய்ய முடியா இயலாமை, அவர்களின் ஆதிக்கம் என நாம் நிஜத்தில் பார்க்கும் அத்தனை விஷயமும் அச்சுஅசலாக நம் கண்முன்னே விரிகிறது.  நிச்சயம், அட ஆமாம்ல என போட வைக்கும்.

திலகன், இவர்களிடத்தில் தன் சொத்தை விற்க அணுகும்போது படம் சூடுப்பிடிக்கிறது. தன்னுடைய நிலம், கடைசி நேர சட்டசிக்களால் விற்க முடியாமல் போனாலும், இவர்களுடன் ஏற்படும் நட்பால் பிரித்விராஜுடனே தங்குகிறார். மேலும் திலகன் தரும் டிப்ஸ்களால், இவர்கள் தொழிலில் அடையும் முன்னேற்றம் என அத்தனையும் சுவாரஸ்யம். 



வித்தியாசமான குணம் கொண்ட ஜெகதி ஷாப்பிங் மால் கட்டி விற்பவர். அவரிடம் ஷாப்பிங் மாலை தனக்கென (பவர்) வாங்கி, கைமாற்றி காசு பார்க்க துடிக்கும் துடிப்பும், அதற்கான தான் மற்றும் தன் கூட்டாளி,  திலகன் மேற்கொள்ளும் யுத்திகளும் தான் படம்.

நான் இந்த படம் பார்த்து ஏறக்குறைய 3-4 மாதங்களாகிவிட்டது. இன்னும் என்னில் அதன் தாக்கும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இறுதியில் வரும் டிவிஸ்ட்கள் அருமையோ அருமை. அவ்வளவு இயல்பாக கதையில் பொருந்துகிறது. அது என்னவென்று சொன்னால் சுவாரஸ்யம் போய்விடுமாதலால் கூறவில்லை. நீங்களே கண்டு மகுழுங்கள்.

வர வர திலகன் மேல் தீரா காதல் வந்துவிடும் போல எனக்கு. என்னா ஒரு பிறவி நடிகன்யா...!!!! நாம் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவரைப்பற்றி சொல்லும்போதே ஒரு பூரிப்படைகிறேன். வர்ணிக்க வார்த்தையே இல்லை. சிவாஜியை அசால்ட்டா தூக்கி ஏப்பம் விட்டிருவார் மனுஷன்...!! ஒரு துளிக்கூட நடிக்கிறார் என்று நாம் உணரவே மாட்டோம், அப்படியான ஒரு திறமை. இவர் மறைந்தாலும், இவர் புகழ் என்றும் அழியப்போவதில்லை.


 கண்டிப்பாக பாருங்கள் என பரிந்துரைக்கிறேன். படத்தின் இறுதியில் நீங்களும், இதன் நிதர்சனத்தை உணர்வீர்கள். ஏன் இப்படி ஒரு கிளைமாக்ஸ் என்பதை மனதார ஒத்துக்கொள்வீர்கள்.

வியாழன், 29 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-4)


ரோட் ட்ரிப் - டிட் பிட்ஸ்
  
* சென்ற கடைசி பகுதியில் கட்டுரையின் நீளம் கருதி, முடிவு நெருங்கும்போது சுருக்கமாக எழுதினேன். என் நண்பர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, விடுபட்டுப்போன சில பகுதிகளை இங்கு விரிவாகவும், சில டிட்-பிட்ஸாகவும் தருகிறேன்.

·         * ஹத்தா பண்ணையில் இருந்து மீண்டும் ஓமன் எல்லையை கடந்து செல்லும் போது, வழியில் ஒருத்தனும் காணவில்லை. ஈத் பண்டிகை சமயத்திலும் ரோடெல்லாம் வெறிச்சோடி கிடந்தது. செல்லும் சாலையோ செம திரில்லிங்கோட ஒரு சீ-சா போல மேலும் கீழும் போவதுமா இருக்கு. வண்டியில் ஐந்து பேர் இருப்பதால் சில மேட்டில் இழுப்பதற்கு முனங்கியது. ஆதலால் ஒரு ரோட்டின் பிரிவில் எங்கு போவது என்றொரு சந்தேகம் வந்தது. அந்த பிரிவில் ஒரு வழியாக ஃபுஜேராவிற்கும், மற்றொன்றில் உம்-அல்-குயின்கு செல்லலாம். ஏனெனில் ஃபுஜேரா வழி நிறைய சாகசம் நிறைந்தது போல இருந்தது.
  
·         * ஒரு சிறிய தயக்கத்திற்கு பிறகு, வண்டியை ஃபுஜேராவிற்கு செலுத்தலாம் என தீர்மானித்து GPSல் கொடுத்தோம். இந்த தைரியம் எப்படியென்றால், வண்டி தள்ளத்தான் கைவசம் நாலு பேர் இருக்கோமே என்று தான்!!! 

·         * ஒரு உண்மை என்னான்னா எங்க அம்மணிக்கு மட்டும் இது தெரிஞ்சது, நாலு நாள் உப்புமா போட்டு கொன்னுடுவாங்க...அதுவும் சட்னி இல்லாமல்... ஆங்...!! 

·         * இந்த வழியாக இரவில் பயணிப்பதை தவிர்க்கவும். எதிர்பாரா விதமாக வண்டிக்கு ஏதேனும் நேர்ந்தால், நம்ம கதி அதோ கதி தான்...!!

·       * GPS வழிகாட்டுதலில் பயணம் செய்துக்கொண்டிருந்தபோது Wadi Al Helo Tunnel என்ற குகையை நோக்கி வண்டி போகிறது என்று அறிந்தவுடன் மிகுந்த ஆனந்தம் அடைந்தோம். நாங்கள் பயணித்த வழித்தடம், துபாயில் இருந்து நிறையபேர் செல்லும் வழியில் ஒன்றிணைந்தது. 

·        * அந்த குகையை கடந்தவுடன், அருமையான வளைவுகளை கொண்ட சாலையில் பயணித்து, கல்பா ஊரை எட்டியது. அங்கு போட்டிங் வசதி செய்து சுற்றுலா ஸ்தலமாக சமீபத்தில் மாற்றிருக்கிறார்கள். 

·         * இந்த இடத்திலிருந்து நடக்கும் தூரம் தான் மற்றொரு ஓமன் எல்லை. கல்பா என்ற நகரம், ஓமனின் வடக்கு எல்லையை ஒட்டி இருக்கும் ஊர். 

·       * கல்பா, ஃபுஜேரா, கொர்ஃபகான் என்ற ஊர்கள், Gulf of Oman என்ற அரபிக்கடலின் ஒரு பகுதியானது. இது அசலில், நம் பாண்டிசேரி போல ஒரு பக்கம் முழுவதும் கடல், மறுபக்கம் நகரம் கொண்ட ஊர்கள்.

·         * கொர்ஃபகான் என்ற இடம், சுற்றுலாவிற்கு மிகவும் பிரசிப்பெற்ற ஊர். துபாயில் இருக்கும் அத்தனைபேரும், விடுமுறையென்றால் படையெடுக்கும் ஸ்தலம். அதன் காரணமாகவே இந்த இடத்திற்கு போவதை தவிர்த்தோம். Water Sports எனப்படும் விளையாட்டுகள் செம கலைக்கட்டும். பேரா கிலைடிங், வாட்டர் ஸ்கூட்டர், பனானா ரைட் போன்ற நீர் விளையாட்டுகள் ஆட சிறந்த இடம்.

     * ஃபுஜேராவில் உள்ள பழமைவாய்ந்த கோட்டையை கண்டபின்பு, துபாய் செல்லாமல், மீண்டும் ரூட்டை மாற்றி உம்-அல்-குய்ன் போக முடிவாயிற்று. ஒரு ஈ, காக்கா கூட இல்லாத மிக அற்புதமான ஏனைய பேர் அறியாத ரோடு. அருமையோ அருமை.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-3)

முந்தைய 2 பகுதிகளின் விவரங்களுக்கு....!!!

http://nondavan.blogspot.com/2012/10/road-trip.html
http://nondavan.blogspot.com/2012/11/road-trip-part-2.html

சென்ற பகுதியில் கூறியதுபோல், அந்த செங்குத்தான பள்ளத்தை கடந்தவுடனே, ஒரு ஒத்தையடி பாதையில் வண்டியை செலுத்தினான். நான் பதறிப்போய் நாம் வந்தது இந்த வழித்தடம் அல்ல, வண்டியை நிறுத்து சார்லஸ் என்று கதறும்போதே ஒரு பண்ணை தென்பட்டது.

சார்லஸ் நேரே பண்ணையின் பூட்டிய வாசலின் முன்பு வண்டியை நிறுத்திவிட்டு,  வா ஹரி நாத்தூர்கிட்ட போய் அனுமதி கேட்டு பார்க்கலாம் என்று மலையாலத்தில் பரைத்தான். :) (நாத்தூர் என்றால் நம் ஊரில் இருக்கும் காவலாளி அல்லது அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் ஒரு ஆள் என்பது பொருள்). ஒரு பாகிஸ்தானியர் நாத்தூராக இருந்தார். அவன் வருவதை கண்டவுடன், சார்லஸ் நான் ஏதோ ஹிந்தியில் பி.எச்டி. படித்தது போல நீயே பேசு ஹரி என்று என்னை கைக்காட்டினான். நம்ம ஹிந்திப்புலமை அபாரமானது... ’ஏக் மார் தோ துக்கடா’ என்ற ஒரு வாக்கியம் தான் முழுசா தெரியும், ஹிந்தியில்... :) :) :)

அந்த பாகிஸ்தானி நிறைய நேரம் என்னிடம் பேசினான்... நான் அவன் வாயை மட்டும் பார்த்துகிட்டே நின்னேன், சத்தியமா ஒன்னும் விளங்கலை....அரபி வர நேரமாச்சுன்னு மட்டும் பொத்தம்பொதுவா அர்த்தம் பண்ணிட்டேன். இப்போ நம்ம அவன்கிட்ட பேசனும். நான் ஹிந்தியை பிச்சு, கறியாக்கி, நூடுல்ஸ் செய்து ஹம் தேஷக்தே?? பீஸ் மினிட் பஸ் மேரே பாய்.. மேரா பேமாலி ஆயாதா...(அதாங்க ஃபேமிலி) சோட்டோ பச்சோக்கோ தேஷ்க்தேக்கேலியா, பகுத் அச்சான்னு....வாய்ல வந்தது எல்லாம் ஹிந்தின்னு பேசினேன்... நடுநடுவுல அவனும் பேசினான், நமக்கு புரியனுமே??. அவன் நம்ம ஹிந்தி பேசும் புலமையைக்கண்டு, மிரண்டுப்போய் ஓகேன்னு சொல்லிட்டான், சீக்கிரம் பார்த்துட்டு வந்திருங்க என்று சொன்னான்னு நினைக்கிறேன்.

எந்த எதிர்பார்ப்புமின்றி உள்ளே சென்றால் வாழ்வின் மிக உன்னதமான தருணத்தை உணர்ந்தேன். நாம் அதன் அழகில் அப்படியே லயத்துப்போனோம். நான் ஏதோ வேறோரு பூமியில் இருப்பது போன்று ஒரு கனநேர உணர்வு.
பண்ணையின் உள்ளே (அடர்ந்த மாங்காய் மரங்கள்)
நான் சிறுவயதில், கொங்கு நாட்டு வயக்காட்டில் சுற்றித்திரிந்தது அப்படியே மீண்டும் கால சுழர்ச்சியாக கண்முன்னே  வந்ததாக உணர்ந்தேன். எங்கு பார்த்தாலும் மாங்காய் மரங்கள், கருவேப்பிலை மரங்கள், ஈச்ச மரங்கள், அடர்ந்த புள்வெளிகள், நம்ம ஊரில் இருப்பது போல் சிறிய நீர் பாசன பாத்திக்கட்டு (வாய்க்கால்) என எல்லோருக்கும் இன்பதிர்ச்சியை கொடுத்தது. நம்ம வீட்டு அம்மணி, சளைச்சவங்களா என்ன? அங்கு இருக்கும் கருவேப்பிலை மரத்தில், ஒரு வாரத்திற்கான இலையை பறிச்சுட்டாங்க.... :) :)

வயல்வெளி
மாங்காய் மரத்தின் கீழ், என் மகன் யோகவ்
நீர் பாசன வாய்க்கால் (பாத்திக்கட்டு)
ஈச்ச மரங்கள் நிறைந்த தோட்டம்
யார் சொன்னது துபாய்ல புல்லு, பூண்டு கூட முளைக்காத பாலைவனம் என்று. முறையாக பராமரித்தால், எல்லாம் சாத்தியமே என்பதற்கோர் சிறந்த  உதாரணம், இந்த காட்சிகள். அதுவும் வெறும் மொட்டை மலைகளால் சூழ்ந்த ஒரு இடத்தில். அந்த நாத்தூர் மீண்டும் அங்கே வந்து, 30 நிமிடம் ஆகிவிட்டதாகவும், அரபி சற்று நேரத்தில் வருவதாக கூறினான். சரியென்று வெளியே வர மனமில்லாமால் நடையை கட்டினோம்.

வண்டியில் இதைப்பற்றியே சிலாகித்துக் கொண்டு வந்தோம். இதை நீங்களும் காணும்போது நிச்சயம் நான் அடைந்த பரவசம் நீங்களும் உணர்வீர்கள் என்பதில் எனக்கு சிறியளவு ஐயமும் இல்லை. அடுத்து, ஓமன் நாட்டின் எல்லையை கடந்து ஃபுஜேரா செல்ல தீர்மானித்தோம்.

இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன். நம்ம ஊரைப்போல், வழி கேட்டு கேட்டு செல்லலாம் என்பது இங்கு முற்றிலும் இயலாத காரியம், அதுவும் இதுபோன்று பலரும் அறியப்படாத வழியென்றால் கிழிந்தது பொழப்பு... ஆகையால், கையில் GPS சிஸ்டம் கொண்ட மொபைலே தெய்வம். நாம் போகும் இடத்தை கொடுத்துவிட்டால் போதும், அதுவே நம்மளை முழுவதும் வழிநடத்தும்.

இன்று எங்கள் வாழ்வின் ஜாக்பாட் என்று தான் சொல்ல வேண்டும். நான் இதற்கு முன்னமே ஃபுஜேரா சென்றிருந்தாலும், இப்படி ஒரு வழித்தடம் கண்டதே இல்லை!!! , நாளா பக்கமும்  உயர்ந்த மலைகள், கண்ணுக்கு எட்டின தூரம் வரை ஆள் நடமாட்டமே இல்லை, ஆள் எதற்கு... ஒரு வண்டி கூட தென்படுவது இல்லை. அதன் நடுவே த்ரில் பயணம்.
செங்குத்தான த்ரில் நிறைந்த வழித்தடம்
நான், என் மகன் யோகவ் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டோம். இங்கு பொதுவாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முன்சீட்டில்  அமரக்கூடாது. மீறினால் அபராதம் நிச்சயம். ஆனால், நாம் தான் இந்தியர்களாச்சே... போலிஸ் இல்லையென்றால் ரூல்ஸை மீறுவோமே...!!! ஒரு தைரியத்தில் என் மகனை அமர சம்மதித்தேன். எனக்கும் அந்த த்ரில் ரைடில் ஒரு துணையாச்சு. அதுவும் வழியெல்லாம் சாகசம் செய்யும்படியாக சாலை எப்படியென்றால், வண்டி செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம்வரை தான், சாலை தெரிகிறது. அதற்கு அப்புறம் என்னவென்று தென்படவே இல்லை. எவ்வளவு முயன்றும், எவ்வளவு கிட்ட சென்றாலும், அத்தனை வேகத்திலும். மிக அருகில் சென்றால் பெரும் பள்ளம் போல் கீழே செல்லும் சாலைகள், நாம் ஜெயண்ட் வீலில் பயணம் செய்வது போல், திடீரென்று கீழ் நோக்கி செல்கிறது. செம்ம அனுபவம்....!!

ஜெயிண்ட் வீல் போல கீழ் நோக்கி செல்லும் ஒரு பகுதி
இப்படியாக பலப்பல சாகசம் நிறைய செய்துக்கொண்டு ’Wadi Al Helo Tunnel’ என்ற இடத்தை அடைந்தோம். இரண்டு பெரிய மலைகளை குடைந்து 1.6 கி.மீ நீளம் கொண்ட இந்த குகை, 2003ஆம் ஆண்டு மாற்று போக்குவரத்தாக சார்ஜா அரசால் கட்டப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் மிக நீலமான குகை (Tunnel) என்பது இதன் சிறப்பு. இந்த ரோட்டின் பெரும்பகுதி, சார்ஜாவிற்கு சொந்தமான பிராந்தியம் அது. நேரில் மிக பிரம்மிப்பாக இருக்கும்

பின்னால் இருக்கும் யுஅரிய மலையை கடந்து செல்ல குகை
வாதி ஹலோ டன்னல்

குகையின் உட்பகுதி
இந்த குகையை கடந்து சென்றால், நாம் ஊட்டி செல்வது போல கீழ்நோக்கி செல்லும்.மலைப்பாதை இருக்கும். கீழே ஒரு அழகிய கடற்கரை சார்ந்த சிறிய நகரம், கல்பா. நம் காரைக்கால் போல இந்த கல்பா ஊர் எங்கோ இருக்கும், சார்ஜா எங்கோ இருக்கும் , இதே போல் திப்பா என்ற ஊரும் சார்ஜாவிற்கு சொந்தமானது. ஆனால், இது இருப்பது வேறு இடத்தில். இதைப்பற்றி பின்னர் கூறுகிறேன். உங்களுக்கு எளிதில் விளங்க - உதாரணத்திற்கு, எப்படி காரைக்கால், மாகே என்ற ஊர்கள் எங்கோ இருந்தாலும், அது பாண்டிச்சேரிக்கு சொந்தம் என்கிறோம், அதே போலத்தான் கல்பாவும், திப்பா என்ற ஊரும்.

புதிய படகு சவாரி - கல்பா

கல்பா பீச்

கல்பா பீச்
கல்பா பீச்சும் நம் பாண்டிச்சேரி பீச்சை போல ரம்மியமாக இருக்கும் சமையத்தில், அதே போல் கருங்கற்களை வைத்து நிறப்பி உள்ளார்கள். இங்கு சற்று விளையாடிவிட்டு, பயணத்தை ஃபுஜேராவின் கோட்டைக்கு தொடர்ந்தோம்.

ஃபுஜேரா என்ற ஊர், 1952ஆம் ஆண்டுவரை சார்ஜாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் தனி எமிரேட்டாக உருவானது. இங்கு காணும் வீடுகள் எல்லாம், நம் இந்தியா போல் தோற்றமளிக்கும். மிகச்சாதாரண கட்டிடங்களோடு. பெரும்பாலும், தரைத்தளம் மட்டுமே.

ஃபுஜேரா கோட்டை -  இந்த நாட்டின் மிகப்பழமையான கட்டிடம் என அறியப்படுகிறது, தோராயமாக 1670ஆம் ஆண்டு இருக்கும். ‘கத்தாமா’ என்ற மலையாள படத்தில் காவ்யா மாதவன் ஜெயிலில் இருந்து வெளிவரும் காட்சி, இங்கு படமாக்கப்பட்டுள்ளது.

கோட்டையின் நுழைவாயிலில் யோகவ்
ஃபுஜேரா கோட்டை
மணி மாலை ஐந்தை தொட்டது. எங்கூட்டு அம்மணி, கோவத்தில் பொருமிக்கொண்டிருந்தாள். அதற்கு காரணம் நான் ஒன்றும் சாப்பிட வாங்கிக்கொடுக்கவில்லை. மாசக்கடைசியாதலால், டப்பு லேது. கிரெடிட் கார்ட் உள்ள கடை கண்ணுக்கு அகப்படவில்லை. விதி மீண்டும் கொடுயது பாஸ். கோவத்தின் உஸ்ணம் காரணமாக ஒரு சிறியக்கடையில் வண்டியை நிறுத்தி, ஜூஸ், சிப்ஸ், ஏழைகளின் சாண்ட்விட்ச் பரோட்டோ, ஒரு டீ வாங்கிக்கொடுத்து உஸ்ணத்தை சற்று தணித்தேன்.

பின்பு எங்கள் பயணத்தை உம்-அல்-குயின் என்ற எமிரேட்டிற்கு தொடர்ந்தோம். ஆனால் இருட்டாகிவிட்டதால், பெரிதாக இன்றும் காணமுடியவில்லை. ஒரு அருமையான பீச் இருந்தது. சிறிது நேரம் காற்று வாங்கிகொண்டே மிச்சமீதி நொறுக்குகளை அங்கு முடித்திவிட்டு வண்டியை கிளப்பினோம்.

இரவாகிவிட்டதால், ஒரு கிரெடிட் காட் இருக்கும் கடைக்கு சென்று செம கட்டுக்கட்டிவிட்டு அம்மணியின் கோபப்பார்வையில் தப்பித்து அஜ்மான், சார்ஜா வழியாக துபாய் அடைந்தோம்.

கட்டுரையின் நீளம் கருதி, இறுதியில் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.:)

எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியா அனுபவத்தை கொடுத்த என் நண்பர் சார்லஸ்க்கு ஸ்பெசல் நன்றிகள்.

வியாழன், 1 நவம்பர், 2012

Road trip - ஹத்தா - ஃபுஜேரா - துபாய் (Part-2)

பகுதி-1 பற்றிய விவரங்களுக்கு
http://nondavan.blogspot.com/2012/10/road-trip.html

சென்ற பகுதியில் கூறியது போல், ஓமன் நாட்டின் எல்லையைக் கடக்க நம் போட்டோ ஒட்டிய அடையாள கார்டை காண்பிக்க வேண்டும். எமிரேட்ஸ் ஐடி கார்ட் அல்லது பாஸ்போர்ட் விசா பேஜுடன். (எமிரேட்ஸ் ஐடி கார்ட் என்பது இந்த ஊரில் வசிக்கும் நபர்களுக்கு தரப்படும் ஐடி கார்ட்)

இங்குதான் ஒரு சிறிய சிக்கல் காத்திருந்தது. எங்கூட்டு அம்மணி, என் பையனின் ஐடி கார்டை தொலைத்துவிட்டாள். கிளம்பும் அவசரத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பிறகு வேறென்ன, சண்டை தான் :) :)

சரியென்று ஒரு முடிவோடுதான் எல்லையை கடக்க சென்றோம். ஒரு வேளை நாம் பிடிபட்டால், போலீஸ் எங்களை எல்லையை கடக்க அனுமதிக்க மாட்டார்கள். நம் வாகனத்தை திருப்பி துபாய்க்கே போகச் சொல்வார்கள். பக்பக்கென்று ஹார்ட் பீட் வேகமாக அடிமனதில் அடித்தது. வெளியே காட்டிக்காமல் என் ஐடி கார்ட், என் நண்பர் சார்லஸின் ஐடி கார்ட் காண்பித்தபின் அந்த போலீஸ் போகச்சொல்லிட்டான். காரணம், நாங்க பெரிய பிஸ்தாக்கள் என்று நினைக்க வேண்டாம் :).

போலீஸ்காரர் பின்சீட்டில் பெண்கள், குழந்தை இருப்பதை கண்டு, ஃபேமிலி என்றவுடன் ஓகே செல்லுங்கள் என்று கூறிவிட்டார். இங்கே நான் சொல்ல விரும்புவது, இந்த நாட்டில் பெண்களுக்கு தான் முதல் மரியாதை. பெண்களை அவ்வளவு மதிப்பார்கள். குடும்பமாக சென்றால் எல்லா இடத்திலும் கூடுதல் மரியாதை நிச்சயம் கிடைக்கும், இதை கண்கூடாக நீங்க உணர முடியும். நான் கூறுவதற்கு இதுவே ஒரு நேரடி சாட்சி.

எல்லையை கடந்தவுடன், மனதில் ஒரு நிஷாந்தம் உருவானது. பின்பு ஒரு பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்திவிட்டு, நொறுக்குத்தீனி, தண்ணி பாட்டில்கள், காபி என்று உண்டு ரிலேக்ஸ் செய்துக் கொண்டோம். வண்டிக்கு பெட்ரோல் ஃபுல் டேங்க் அடித்துக்கொண்டோம். சென்ற பகுதியில் கூறினேன் அல்லவா... பெட்ரோல் சிறிதளவு தான் போட்டுக்கொண்டு கிளம்பினோம் என்று, யூகித்தீர்களா??? ஆம், துபாயை விட, ஓமனில் பெட்ரோல் விலை இன்னும் குறைவு. துபாயில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 24ரூபாய், அதுவே ஓமனில் 15ரூபாய், நம் இந்திய ரூபாயின் ஒப்பீட்டின் மதிப்பில்.

சிறிது நேரத்தில் ஹத்தா டவுனை அடைந்தோம்.
ஹத்தா டவுன்
இது துபாயை விட முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் ஊர். துபாயில் எங்கு பார்த்தாலும் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்தது. ஆனால் இங்கு எல்லா வீடுகளும், அலுவலகக் கட்டிடங்களும் தரைதளம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் முதல் மாடி கொண்ட மிகச்சிறியளவிளான கட்டிடங்கள். அதுவும் அரபிகளின் கட்டிட கலைகளை சார்ந்தவைகள் இதன் சிறப்பு. ஹத்தாவை ஏன் ’நாட்டின் பாரம்பரிய டவுன்’ என்று அழைக்கிறோம் எனக் காணும்போது தான் புரிகிறது. நான் சொல்வதைவிட, நீங்களே படத்தை காணுங்கள்.
அரபி கட்டிட கலையில் இருக்கும் கட்டிடங்கள்
குடியிருப்பு வீடுகள்
குடியிருப்பு வீடுகள்
 இப்பொழுது எங்கள் பயணம், ஹத்தா டேமை நோக்கி நகர்ந்தது. போகும் வழியில் ஹத்தாவின் மிகப்பழமையான ராணுவ கோட்டை (Military Fort) மற்றும் ஜும்மா மசூதி கட்டிடத்தைக் காண நேர்ந்தது. இது 1780ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக அறிகிறேன். இதற்கு கீழே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் தற்போது அமைத்துள்ளார்கள், சுற்றுலா வரும் நபர்களை கவர. என் மகன் அதைக்கண்டால் ஒரு மணி நேரத்தை விழுங்கி விடுவான். ஆதலால், நேரம் இல்லாத காரணத்தால் ஒரு புகைப்படும் மட்டும் எடுத்துக்கொண்டு வண்டியை டேம் (Dam) அமைந்திருக்கும் மலையில் ஏற்றினோம்.

Military Fort (Oldest Building in Hatta)


மிக அருமையான வழித்தடம். இதில் பயனித்தபோது, எனக்கு கோவை மருதமலை உச்சிக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து மேலிருக்கும் கோயிலுக்கு போக ஒரு சிறப்பு வழித்தடம் இருக்கும். அதில் பயணித்த நினைவலைகள் வந்தது. முதலில் வளைந்து வளைந்து செல்லும் பாதை, இறுதியில் செங்குத்தாக ஏறும். எங்கள் வண்டி, இறுதியில் செங்குத்தான பகுதியில் ஓவர்லோட் காரணமாக இழுக்கவில்லை.  எல்லோரும் இறங்கி படிக்கட்டில் நடக்க ஆரம்பித்தோம். சார்லஸ் & யோகவ் மட்டும் காரில் மேலே சென்றார்கள்.
டேம் மேல செல்லும் படிக்கட்டு பாதை
மூச்ச்சிரைத்து நிற்கும் என் தங்கைகள்

மேலே போய், அங்க போலாம் என்று சும்மா பீலாவிடும் நான்




 இந்நேரம் உங்க மனதில் ஒரு கேள்வி உதயமாகிருக்கும் என நினைக்கிறேன். வறண்ட பாலைவனத்தில் இருக்கும் ஊருக்கு எதற்கு நீர்தேக்கும் டேம் என்று... ???? ஏற்கனவே சொன்னதுபோல் ஹத்தா என்ற டவுன், மலைகளை சுற்றியுள்ள பகுதி. நீங்கள் அறியாத உண்மையொன்று உண்டு. அது துபாயில், குளிர்காலத்தில் வருடத்திற்கு இரண்டு நாள் நிச்சயம் மழை பெய்யும்.

இங்கு ஒரு வேளை அடைமழை வந்தால், பெய்யும் மழைக்கு ஒரு வடிகால் தேவையல்லவா??? சுற்றியிருப்பவைகள் எல்லாம் மொட்டை மலைகள், நீர் தேங்க வாய்ப்பேயில்லை. ஊரில் வெள்ளம் வராமல் மக்களைக் காக்க வேண்டும், மேலும் மவராசன் ஷேக்கிடம் பணம் இருக்கு. அப்புறம் என்ன, 1989ஆம் ஆண்டு கட்டிட்டாங்க டேம்.

ஹத்தா டேம் (Hatta Dam)



Another View
மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும் போது, இது எங்கோ ஒரு திரைப்படத்தில் கண்டதைப் போல் உணர்கிறீர்களா? நானும் பலப் படத்தில் இந்த இடத்தை காணும்போது,  இது துபாய் என அறிவேன், ஆனால் எங்கு என்று தெரியாமல் பல நாட்கள் மண்டை குழம்பி இருந்துள்ளேன்.

நீங்கள் கணித்தது சரிதான். ‘நான் அவன் இல்லை’ படத்தில் சினேகா நடித்த ’ஏன் எனக்கு மயக்கம்’ என்ற பாடல் காட்சி நியாபகம் வருதா??? அதே, அதே..... இந்த டேமில் நிறைய சினிமா பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதில் அதுவும் ஒன்று.

சினேகா பாடிய பாட்டு நியாபகம் வருதா????
அந்த பாட்டின் வீடியோ லிங்க் இதோ.
http://www.youtube.com/watch?v=HCFjKWH-2p8

மேலும், இந்த இடத்தில் எடுத்த சில சினிமா பாடல் காட்சிகள் உங்க பார்வைக்காக தருகிறேன்.

ஏன் எனக்கு மயக்கம் பாடல் - நான் அவன் இல்லை -1 (தமிழ்)
பாக உன்னாரா பாடல் - நான் அவன் இல்லை -2 (தமிழ்)
சதுஅ, ஏமிடோ - அதிதி (தெலுங்கு)
முதல்முறை பார்த்தேன் - பிரியசகி (தமிழ்)
மொகவாடா மாதி போயேரா - அல்லாரி புல்லூடு ி (தெலுங்கு)
அப்போ வீடூ எந்த்தோ - ஒக்கடுன்னாடு ி (தெலுங்கு)
யாமினி - ஆறுமுகம் (தமிழ்)
மனசில் மனசில் - நம் நாடு (தமிழ்)
கர் தூன் கமால் - முஜ்ஷே ஷாதி கரோகி ் (ஹிந்தி)
யே கௌன் ஆயா மேரே தில் மைன் - சௌடா - தி டீல் ் (ஹிந்தி)
ஜப் கபி - 36 சைனா டவுன் (ஹிந்தி)

இந்த டேமில் வருடம் முழுவதும் நீர் தேங்கி இருப்பது,ஆச்சர்யமே...!!! நாம் டேமின் அடியில் சென்று நீரில் விளையாடலாம். நீர், நம் முழங்கால் அளவு தான் இருக்கும். ஆகையால் ஆபத்தேதும் இல்லை. மிக மிக அற்புதமான இடம். சந்தர்ப்பம் இருப்பின், சென்று வாருங்கள், தவற விடக்கூடாத ஒரு இடம். துபாயில் வசிக்கும் பலப்பேருக்கு இந்த இடம் இன்னும் தெரியாது என நினைக்கிறேன்.

நாங்கள் திரும்பும் வேளையில் நல்ல கூட்டம் கூடிவிட்டது. மிகவும் சிரமப்பட்டு வண்டியை திருப்பி இறக்கினான், சார்லஸ். அடுத்து கீழே இறங்கும்போது, என் நண்பன் இங்கு அரபிகளின் ஏராளமான பண்ணை வீடுகள் இருக்கு. யாருடனேனும் உள்ளே செல்ல கேட்டு பார்க்கலாம் என்று கூறினான். சம்மதித்தால் உள்ளே ஒரு ரவுண்ட் சென்று வரலாம் என முடிவு செய்து ஒரு ஃபார்ம் ஹவுஸ்க்கு சென்றோம்.

இன்னும் ஒரு பகுதி மட்டும் தான் இருக்கு... உங்களை போட்டு தாளிக்க மாட்டேன் :) :)