Yogev & Me - பள்ளிக்கு சென்ற முதள் நாள் (03-04-13
யோகவும் நானும் |
நமக்கு எல்லாமே கடைசி நிமிஷ ஞானோதயம் தானே..!!! இவ்ளோ நாட்கள் அவனை லேசா விட்டுவிட்டு, கடைசி இரண்டு நாட்களாகவே பள்ளிக்கு செல்ல ஆயத்தப்படுத்தினோம்.
கராமாவில் (துபாயில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி) இருக்கும் லூலூ சூப்பர் மார்கெட் சென்று அவனுக்கு வேண்டிய ஸ்கூல் பேக், பென்சில் பாக்ஸ், லஞ்ச் பாக்ஸ், துண்டு, தண்ணி பாட்டில் என வாங்கிக்கொடுத்தோம். ஒவ்வொன்றும் அவன் விருப்பப்படியே, அவன் தேர்வு செய்த மாடல், கலர்களிலேயே அனைத்தும் அவன் எண்ணத்திற்கே விட்டு விட்டோம்.
இதில் என்ன விஷேசன்னா, அனைத்தும் ப்ளூ கலரில் எடுத்துக்கொண்டான். Blue Color School Bag, Blue color Water bottle, Blue color, Blue color Pencil box, Blue color Lunch box என அனைத்தும் ப்ளூ மயம்....!! அதில் யோகவ் ஏக குஷி. குறிப்பாக டிராலி டைப்பில் இருக்கும் ஸ்கூல் பேக், கையிலேயே வைத்துக்கொண்டான்.
ஒரே ப்ளு மயம் |
எங்கள் முன் இருந்த அடுத்த மிகப்பெரிய சவால், அவனை காலை எழுப்பி தயார் செய்வது தான் :) :) :) இரவு 1 மணிக்கு உறங்கி, காலை 11 மணிக்கு எழும் பழக்கமுள்ளவன் யோகவ். அதற்கு முற்றிலும் மாறாக அதிகாலை எழுப்பி, அவனுக்கு அனைத்தும் முடித்து காலை 7.10 க்கு பஸ்சில் ஏற்றிவிட வேண்டும். ஒரு நாள் கூட அவனை முன்பே எழுப்பி, தயார் செய்து பழக்கப்படுத்தவில்லை.
பேருந்திற்காக காத்திருக்கையில் |
காலை 5.30 மணிக்கு என் மனைவி என்னை எழுப்பிவிட்டாள். நானே முனங்கிட்டு தான் முழித்தேன். யோகவ்வை எழுப்பி ரெடியாக்கச் சொன்னாள். பாவம் அவன், இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்றேன். பழைய படத்தில் நம்பியார் அடியாட்களிடம் முறைப்பது போல் முறைத்து, முடியாது என்றாள்.
அவனை அதிகாலை 5.45க்கு மெதுவாக எழுப்ப துவங்கி 6.00 மணியளவில் முழித்தான். படுத்துக்கொண்டே சன்னனில் பார்த்தவன், அப்பா சன்னே (சூரியன்) இன்னும் வரலை... எனக்கு ஸ்கூல் நாளைக்கு தான், நீயும் படுப்பா, என்றான் பாருங்க....!!! அவன் பதிலில் விக்கித்து போனேன். :) :) :) என்ன சொல்ல முடியும் !!!!
ஒரு வழியா எழுப்பி, அடுத்த டார்கட்டான பல் துலக்குவதில் நின்றது. என்ன என்னமோ முயற்சித்தும், பல்லை காட்டவே இல்லை. வேண்டாம் என என் மீது சாய்ந்துக்கொள்கிறான். நான், தங்கம், செல்லம், குட்டி என எல்லா ஆசை வார்த்தையும் சொல்லி ஸ்டாக் தீர்ந்துப்போனது. மணி 6.40 என்ற பதற்றம் வேறு. அவன் அம்மாவிடம் ரெண்டு பூஜை விழுந்தப்புறம் தான், பல் துலக்கும் படலம் முடிந்தது.
அடுத்து குளிப்பதில் அதிகம் சிரமம் வைக்கவில்லை. என்னுடன் குளிப்பது என்றால் அவனுக்கு எப்பவும் ரொம்ப குஷி. அதனால் டக்கென வந்துவிட்டான். சீக்கிரம் குளித்து, புதுத்துணி ஆசைக்காட்டி ரெடியாக்கிட்டேன். என் மனைவியும் அவனுக்கு ஸ்கூலுக்கு வேண்டியதை தயார்ப்படுத்தினாள். பிறகு யோகவ்விற்கு பூஸ்ட் அருந்தக்கொடுத்தாள். அந்த சந்து கேப்பில், நான் முகம் கழுவி, முந்தைய நாள் ஆபிசுக்கு போட்ட துணியை போட்டுக்கொண்டேன்.
பள்ளி போக ஆர்வமாக யோகவ் |
பஸ்சும் வந்தது. அதைக் கண்டவுடன் என்னை அறியாமல் என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. ஏன் என்று தெரியவில்லை!!! முதல் முறையா என்னை என் மகன் பிரியும் தருணமாதலால் இருக்கக்கூடும். ’அபியும் நானும்’ படத்தில் பிரகாஷ்ராஜ், தன் மகளை பள்ளியில் விடும்போது அழுவாரே, அதே காட்சியில் இப்போ நான். அந்த காட்சியுன் ஆழம் இப்போ புரிகிறது. யோகவை பஸ் பஸ்சில் ஏற்றிவிட்டு, ஆயாவிடம் பத்திரம், அவனுக்கு ஹிந்தி, ஆங்கிலம் அவ்வளவா தெரியாது என்று கூறிக்கொண்டேன். ஒரு சிங் பையன் அருகில் யோகவை அமர வைத்தார்கள். அந்த பையன் அழுதுக்கொண்டு இருந்தான், யோகவ் அவனையே பார்த்துக்கொண்டு சமத்தாக இருந்தான்.
ஓட்டுனரிடம் மதியம் நாங்கள் வந்து கூட்டிக்கொண்டு வருகிறோம் என பேசும்போது, ஓ என அழுகை சத்தம். திரும்பி பார்த்தால் யோகவ், அப்படி கத்திக்கொண்டு அழுகிறான். என் மனைவியை திரும்பி பார்த்தால், அவள் கண்களில் தாரைதாரையாக கண்ணீர்....
சிங் பையன் - தொடக்க புள்ளி |
வீட்டிற்கு வந்து சாவி கொடுக்கையில், மனதில் எப்படியும் டாக்ஷியில் தான் செல்ல வேண்டும், என் மனைவி அழுத காட்சியும் கண்முன்னே இருந்ததலால் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போவோம் என தோணியது. நான் தான் மொத்த நாள் விடுமுறை எடுத்தாச்சே....!!! அனைவரும் ஒன்றாக யோகவை விட பள்ளிக்கு டாக்ஷியில் சென்றோம், பக்பக்வென. பள்ளிக்கு செல்ல 20 நிமிடம் தான் இன்னும் மீதி, இந்த கலவரத்தில்....
யோகவ்வின் இருக்கை, பள்ளி அறை |
இப்போ 3 குழந்தையை தவிர ஏனைய அனைவரும் செட்டிலாகிவிட்டார்கள்.... அந்த மூவர் ரன்பிர் சிங், இன்னொரு பொன்னு எலிசபத் மற்றும் நம்மாளு யோகவ் . இவ்ளோ நேரமும் யோகவ் இருக்கையில் கூட உட்காரவில்லை... இவ்ளோ கலேபரத்திலும் அவன் டிராலி பேக்கையும் விடவில்லை.... அதை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, அவன் அம்மாவை மற்றொரு கையில் பிடித்து வீட்டிற்கு போகலாம் என்று ஒரே அழுகாச்சி....
யோகவை சமாதானம் செய்தபோது |
யோகவின் பள்ளி மிஸ் பெயர் திவ்யா, நிஜமான கண்கண்ட தெய்வம்.... !!! அத்தனை குழந்தைகளை வைத்து சமாளிப்பது சத்தியமா சாதாரணக் காரியமில்லை. ஒன்று அழுக ஆரம்பித்தால், அடுத்தடுத்தாக வரிசையாக தொடங்குகிறார்கள்....அவர்களை எடுத்து கொஞ்சிக்கொண்டு, பொம்மைகளை கொடுத்து விளையாடிக்கொண்டு, சிலரை சமாதானப்படுத்த அவர்களை இடுப்பில் எடுத்து தூக்கிக்கொண்டு பந்து, பொம்மை, விடீயோ என பலதரப்பட்ட வேலைகள்.... அதீத பொறுமை தேவை. A Royal Salute to her..!!
நம்ம கலையுலக வாரிசு, இப்போது தான் ஆசுவாசமாகி, மேஜையில் இருக்கும் கிரேயான் பென்சிலில் அவனுக்கு பிடித்த கலரை எடுத்து கொடுக்கப்பட்ட தாளில், கிறுக்க ஆரம்பித்தான்... நொடிக்கொரு முறை, நான் மூலையில் இருக்கேனா என பார்த்து உத்திரவாதத்துடன். நைசாக ஒரு அடி மெல்ல வைத்து கதவை நோக்கி நகர்ந்தால், உடனே அப்பாஆஆஅ போக வேண்டாம் என அழுகை.... நான் படித்த காலத்தில் கூட ஒரு பனிஷ்மண்ட் வாங்கியதில்லை. இப்போது ஏதோ தண்டிக்கப்பட்டவன் போல ஒரு மூலையில் நின்றுக்கொண்டு நான்...!!!
டிஜிடல் ஸ்கிரீனிங் முறையில் பயிற்றுவிக்கும் பள்ளி இது. அதனால் குழந்தைகளை நார்மலாக்க, ஸ்கிரீனில் மிக்கி மௌஸ் கார்ட்டூன் போட்டிருந்தார்கள்..யோகவிற்க்கும் பிடித்த ஒன்று. ஒரு மணி நேரமாகிவிட்டது. வெளியில் எட்டிப்பார்த்தால் என் மனைவி, ஆனந்த என யாரும் இல்லை... எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டார்கள் என புரிந்துக்கொண்டேன்.
ஸ்கூல் பிரின்சிபால் ஒவ்வொரு அறையாக வந்தார்கள்.. என்னையும் சேர்ந்து மூன்று பெற்றோர்கள் உள்ளே இருந்தோம். நீங்க ஏன் இங்க நிக்குறீங்க என்று விசாரித்து, எங்களுக்கு விடுதலை அளித்த மற்றொரு தெய்வம் :) :) :) அவர்கள் அழுதால் பரவாயில்லை, நாங்க பார்த்துக்கொள்கிறோம், நீங்க பள்ளிக்கு வெளியே நில்லுங்க என்றார்கள். யோகவ் அழுக ஆரம்பித்தான்... ஆனால் இருக்கையில் இருந்து எந்திருக்கவில்லை. அவனை பார்க்காத மாதிரி ஓடி வந்துவிட்டேன்.
மணி காலை 9.45. நாங்க யாரும் பல்லு விலக்கவில்லை, குளிக்கவில்லை...:) :) :) பசி கொல்லுது. நானும் மனைவியும் கேண்டீனுக்கு சென்று 2 டீ சாப்பிட்டு வந்தோம். 11 மணி வரை வெளியில் இவனுக்கு காத்துகொண்டு.
11.00 மணிக்கு அனைத்து பெற்றோர்களையும் அவரவர்கள் பேருந்தில் சென்று அமரச்சொன்னார்கள்... குழந்தைகளை ஒப்படைக்க மாட்டோம். குழந்தைகள் அனைவரும் பேருந்தில் ஏறுவார்கள் என்று.
எல்லா குழந்தைகளும் சாராசாரையாக வரும் அழகைக்காணவே கண்கோடி வேண்டும். ஒருவர் பின் ஒருவராக கை பிடித்துக்கொண்டு எல்லோரும் ஒன்றாக வருகிறார்க்ள். (நாம் சிறு வயதில் ரயில் விளையாட்டு விளையாடுவோம்ல, அது போல). என் மனது படபடக்கிறது, என் மகனைத்தேடி. நம் கண்களில் அகப்படவே இல்லை. பொறுமை, டென்சன் தாங்காமல் பேருந்து விட்டு இறங்கி, யோகவ் அறை நோக்கி சென்றேன். மிஸ்சுடன் கை பிடித்துக்கொண்டு வந்துக்கொண்டிருந்தான்.... அப்பாடா, உயிர் வந்தது. மிஸ்சிடம் வினவியபோது, ஒன்றும் இல்லை... தூங்கிவிட்டான், இப்போ எழுப்பி கூட்டி வந்தேன் என்றார்கள்....
எங்களை கண்டவுடன், புத்துணர்வு பெற்று மீண்டும் அதே சேட்டை, வாய், ஆயிரம் கேள்விகள் என இயல்புக்கு திரும்பினான்....!!
சோழர் பரம்பரையில் ஒரு MLA...!! ஹஹ்ஹஹஹா.
என் அம்மா இருந்திருந்தால் மிகுந்த சந்தோஷம் அடைந்திருப்பார்கள்.... எங்க வாழ்க்கை இவ்வளவு மாறியதை எண்ணிக்கொண்டு. நான் பள்ளிக்கு செல்லும் போது, புதுத்துணி உடுத்தக்கூட காசில்லை. நம்மளிடம் இருப்பதிலேயே கொஞ்சம் நல்ல பள்ளி சீருடைதான் தான், பள்ளிக்கு முதல் நாள் உடுத்தும் புதுத்துணி நமக்கு. பெரும்பாலும் நம்முடைய டவுசரை, போஸ்ட் பாக்ஸ் என கிண்டல், ஏளனம் செய்வார்கள் சில உடனிருக்கும் மாணவர்கள். அதை மறைக்க சட்டையை (இன் செய்யாமல்) வெளியே போட்டுக்கொண்டு பல நாள் சென்றுள்ளோம். பல நாள் என்ன... எல்லா நாளும்...!!! :) :) :) எங்களுக்கு பள்ளிக்கு பை என்பது, ஒரு மஞ்ச பை அல்லது எங்கம்மாவே தைத்த ஒரு பச்ச நீள ஜோல்னா பை. அவ்வளவே...!!
என் அம்மா எங்களிடம் அடிக்கடி கூறிய வார்த்தைகள், இந்த வறுமையில் எனக்கு உங்களை ஒரு மெக்கானிக் கடையில் வேலைக்கு போடுவது எளிது, ஆனால் செய்ய மாட்டேன். என்னால் முடிந்த வரைக்கும் படிக்க வைக்கிறேன், கல்வி ஒன்று தான் நம்மளை வேறொரு தளத்திற்கு கூட்டிச்செல்லும். அதை உணர்ந்து படியுங்கள் என்றுதான். அதனால் என்னை எப்படியோ டிப்ளமோ படிக்க வைத்து விட்டார். என்னை இன்ஜினியர் படிக்க வைக்க முடியவில்லை என்று கடைசியில் வருந்தியதும் உண்டு.
என் அம்மாவும் யோகவும் |
சொல்ல வார்த்தைகள் இல்லை...கண்களில் கண்ணீர்ரும் அம்மாவின் நினைவுகளைத்தவிர....
பதிலளிநீக்குகலங்காதே....!! எனக்கும் அந்த ஆதங்கம் இருக்கு... ஆனால் என்ன செய்ய... நமக்கு யோகவ் இருக்கான்....அம்மாவின் ராசி, நட்சத்திரம் அனைத்தும் இவனுக்கும் ஒன்றே
நீக்குஅருமையான பதிவு அண்ணா ...
பதிலளிநீக்குவாசிக்கும் போது வாய்விட்டு சிரிச்சிட்டேன் ...
அவ்வளவு பிளான் பண்ணி பண்ணுனாலும் பாசத்தில பதட்டம் இருக்க தான் செய்யுது ..
அருமையான பதிவு... இருபது வருடங்களுக்கு முன்பு நாம் நினைத்திருக்கவே மாட்டோம் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும் என்று... சுவாரஸ்யமான எழுத்து நடை.... நன்றி...
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பா.... கண்டிப்பா, ஒவ்வொரு தருணமும் தித்திக்கும் பொழுதுகள்
நீக்குஒரு குறும் படம் பால்த்த உணர்வு ஹரி..யோகவின் பள்ளிப் பருவம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு