வியாழன், 13 டிசம்பர், 2012

கண்ணா..!!! துபாயில் ஃபிஷ் பிரியாணி திங்க ஆசையா..!!

அரபு தேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்த தலைப்பின் வசீகரம் தெரியும். ஒரு புன்முறுவலோடு அடப்பாவி, எந்த ஆடு சிக்கப்போகுதோ என மனதில் நினைத்துக்கொள்வார்கள்.

ஏன் இந்த தலைப்பு என்று புரியாதவர்களுக்கு, சிறிய விளக்கம் இதோ!

நம் ஊரில் மாமியார் வீட்டிற்கு போகனுமா என்பதை தான் இங்கு ஃபிஷ் பிரியாணி திங்க போறியா என கேட்பது... :) :) :)


 துபாய், சொர்க்க பூமி என்பதில் மாற்று கருத்தேதும் இல்லை. நிறைய சுதந்திரம் நிச்சயம் இருக்கு, அடுத்தவரை சீண்டாத வரையிலும்.  சரி, சட்டுபுட்டுன்னு விஷயத்திற்கு வருவோம். இங்கு இலவசமாக ஃபிஷ் (மீன்) பிரியாணி திங்க ஆசைப்படும் நபர்கள், தவறாமல் செய்ய வேண்டியவைகள் கீழே...!!

குறிப்பு : பின்விளைவுகளுக்கு, என்ற கம்பேனி பொறுப்பல்ல...

1. இங்கு பெண்களே உயர்ந்தவர்கள். அனைத்து ஆண்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆதலால் அவங்களை முதலில் திட்டிவிடுங்கள். உடனே பிரியாணி கேரண்டி

2. ’For Ladies Only' என்று போர்ட் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு என்ன இருக்கு என ஆராயலாம்

3. ஒரு ஃபிகரை, பெண்ணை வெறிச்சு பார்த்தா போதும்

4. லிஃப்டில் பெண் தனியாக செல்லும் போது, அதில் நாமும் பயணிக்கலாம். குறிப்பாக அரபி பெண் இருக்கும் லிஃப்ட் என்றால் சாலச்சிறந்தது. :)

5. அரபி பெண்களுடன் முதலில் முந்திரி கொட்டைத்தனமாக கைக்குலுக்குவது, பயன் தரக்கூடும்

6. அரபியை தொட்டு பேசுவது, யாராக இருந்தாலும்... 

7. ரோட்டில் எவன் சட்டையையோ பிடித்து டேய், நீ என்ன பெரிய பாடா என கேட்கலாம்

8. பொதுவில் கிஸ் அடித்தால், நம் மாமன் உடனே வருவான்

9. ச்சே, எப்படி பப்லிக்கில் கிஸ் அடிப்பது என தயக்கம் என்றால், கட்டிப்பிடித்தாலும் விமோச்சனம் உண்டு. குறிப்பு  - உங்க காதலி, மனைவியா இருந்தாலும் டீலிங் இதே தான்

10.  கில்மா மேட்டர் செய்து ஃபிஷ் பிரியாணி ருஷியை அறியலாம். ஆனால், இதற்கு அடுத்த ஆள் போட்டுக்கொடுக்கனும் :) எப்படியும் நாம வாய் திறக்க மாட்டோம்

11. வாய்ல சனி உட்கார்ந்தா பலன் உடனே நிச்சயம். கருத்து கந்தசாமியா மதம்., இவர்களின் உடை, ஷேக் மவராசன், கலாச்சாரம் என நம்ம பிஸ்தை, காட்டலாம்.

12. நம்ம காலை, ஷூவை அவர்களை நோக்கி காட்டலாம். எதேச்சையா காட்டினாலும் பிறவிப்பயன் உண்டு. அவர்களை அவமானம் படுத்திய பெருமைக்கு ரிவார்ட்

13. அரபி இருக்கும் திசையில் நம் ஆவேச குரலில் பேசலாம்.

14. சைகையில் மிரட்டினாலும், நம்ம அண்ணன் விசயகாந்த் போல வாய சுலட்டி சுலட்டி காட்டினாலும், நடுவிரலை காட்டினாலும், ஆண்டவன் அணுகிரகத்தால் பிரியாணி கிட்டும்

15. பெர்முடாஸ் போட்டுக்கொண்டோ அல்லது பெண்கள் முட்டிக்கு மேல் ஸ்கர்ட் போட்டுக்கொண்டோ மால்களில் சுத்தலாம்

16. முஸ்லீம் அல்லாதவர்கள், அவர்களின் கோவிலுக்கு (மசூதி) செல்ல முற்படலாம். அல்லது குரான் புத்தகத்தை எடுத்து அவர்களுக்கு காண்பிக்கலாம்

17. ரம்ஜான் நோம்பு சமயத்தில், தண்ணீரோ, சிவிங் கம்மோ, அல்லது ஏதேனும் தின்பண்டம் சாப்பிடலாம்

18. இது நமக்கு ஒத்து வராது, இருந்தாலும் துணிந்த நவநாகரீக பெண்களுக்கு...... பீச்சில் டாட்லஸாகவோ, அல்லது பிகினி உடையிலோ ஒரு வாக் போகலாம்

19. முஸ்லீம் ஒருவர் சாமி கும்மிடும் போது, அவரை தாண்டி சென்றோ அல்லது அவர் முன் நின்று வெறிக்க பார்த்தாலும் பயன் கிட்டும்

20. அரபு வீட்டிற்கு போகும் போது, ஷூ காலோடு சென்று நம் ஏழரையை கூட்டிக்கலாம்

21. தண்ணியடித்துவிட்டு ’ஓஓஓஒ’ என நடுரோட்டில் கத்தலாம்

22. இது கஸ்டம் என கருதினால், ஒரு சிறிய சௌண்ட் விட்டால் கூட போதும்

23. அப்புறம் ரொம்ப ஈஸியா நேரா பிரியாணி தான் வேனும் என்றால், ஏர்போர்ட்டில் இருந்து செல்ல கசகசா, வெள்ளை பவுடர் போன்று எதாவது, டாக்டர் ஸ்லிப் இல்லாத மருந்துகள் என கொண்டுவரலாம்.

24. நம் குழந்தையையோ மனைவியையோ ஓங்கி அடித்து, பக்கத்து வீட்டுக்காரன் கூவினாக்கூட பலனை எதிர்பார்க்கலாம்

25. யாராக இருந்தாலும் ஒரு சிறிய ரத்தம் வர மாதிரி சண்டை, சச்சரவுக்கு காரணமாக இருந்தால் போதும்

26. ஜீப்ரா கிராஸிங்கில் ரோட்டை கடக்காமல், தேமே என்று நடுரோட்டில் ரோட் கிராஸ் செய்து நம் புண்ணியத்தை சோதிக்கலாம்

27. நம் குழந்தையை ரோட்டில் தவறவிட்டால் அல்லது எதேச்சையாக நம்மை அறியாமல் அவர்கள் ரோட்டை கடந்தால், பெற்றோருக்கு ஒரு வாரம் கேரண்டி (பேரண்டிங் கிளாஸ் உ ண்டு). unattended child at public place is punishable

28. மது அருந்திவிட்டு காரை தொட்டால், ஃபிஷ் பிரியாணி கேரண்டி

29. மதுவை வீட்டில் வைத்திருந்தாலும் இதே கதி தான்.

30. ஹோம் தியேட்டர் இருக்கே என்று, ஓவர் சௌண்ட் வைத்து பக்கத்து வீட்டுக்காரனை தூங்க விடாமல் செய்யலாம்

31. அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட, ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டினால் நம்மை அங்கேயே வந்து அழைத்துச்செல்வார்கள்.

இன்னும் நிறைய வழிமுறைகள் இருக்கு. இதை நான் ஜாலியாக சொன்னாலும் அனைத்தும் முக்கியமானதே...!!!

மேற்கூறியவையை கனவிலும் இங்கு முயலாதீர்கள். இவை எல்லாம் குற்றமாக கருதப்படுகிறது. நம்ம பொடனிக்கு பின்னாடி நிக்குறவன் மாதிரியே, உடனே வந்துவிடுவார்கள், இங்கு உள்ள காவல்துறையினர். அவர்களின் நேர்மை, சேவை பாரட்டத்தக்கது. அப்பாடா....!!!


இதே போல, புதிதாக வருபவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நிலைகள், இங்கிருக்கும் மாற்றங்கள்,  நாம் எதிர்கொள்ளூம் சிக்கலகள் என உங்கள் ஆதரவு இருப்பின் தொடர்கிறேன்.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

Maryada Ramanna - Telegu Movie Review

மரியாதை ராமண்ணா - தெலுங்கு படம்

ஒரு மாறுதலுக்காக என்னை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த தெலுங்கு படம் உங்களுக்ககாக பகிர்கிறேன். இந்த படம் பார்க்க தூண்டும் முதல் காரணி, நம்ம ‘நான் ஈ’ பட புகழ் இயக்குனர் S.S. ராஜமௌலி 2010ல் இயக்கி வெளிவந்த படம். இதுவரை இவர் இயக்கிய அனைத்து படங்களுமே தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் தான். ஒரு காமெடியான நடிகர் சுனிலை ஹீரோவாக்கி தெலுங்கில் கலக்கியெடுத்த படம்.

இப்படம் மராட்டி, பெங்காலி, சமீபத்தில் சன் ஆப் சர்தார் என ஹிந்தியில் ரீமேக்கிய படம். நம் நடிகர் விவேக் கூட , தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக கேள்விப்பட்டேன்.

கதையென்று பார்த்தால், அரதப்பழசான பலிக்கு பலி கதைதான். படத்தின் முதல் 10 நிமிடம் பார்த்தால், என்னடா இது....??? இதையா இவன் இப்படி சிலாகித்து எழுதினான் என என்னை காரி துப்புவீர்கள். அதே கிராமத்து குடும்ப தகராறு, மச்சான் மாப்பிள்ளை வெட்டு குத்து சண்டை, பகைக்கு பயந்து குழந்தையுடன் தாய் வெளியூருக்கு ஓட்டம், பின்பு ஹீரோவின் ஏழ்மை என அனைத்தும் கிளிஷே காட்சிகளாக இருக்கும்.

ஆனால் ஹீரோவான சுனில், கிராமத்தில் தனது அன்னைக்கு சொந்தமான ஒரு இடம் இருக்கு என தகவல் அறிந்தவுடன், அதை விற்று தன் ஏழ்மையை சிறிது போக்கிக்கொள்ளலாம் என ஊருக்கு கிளம்பும் போது ஆரம்பிக்குது சரவெடி.

தன் சொந்த ஊரான ராயலசீமா பகுதிக்கு 27 வருடம் கழித்து செல்கிறார். (ராயலசீமா என்பது நம் படத்தில் காட்டும் மதுரை போல, எதற்கெடுத்தாலும் கத்தி, வீச்சு, அரிவால் என் தெலுங்கில் ஃபேமஸ்). அங்கு தன் தம்பியை கொன்ற குடும்பத்தை வேருடன் அறுத்து பலி வாங்க 27 வருடம் காத்திருக்கும் ஊர் பெரியவரான வில்லனனிடமே (Nagineedu) போய் நிலம் விற்க உதவி கேட்டு, அவர் வீட்டிற்கு விருந்திற்கு செல்லும் போது இருந்து நம் வயிறு பதம் பார்க்க ஆரம்பித்துவிடும்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரே ஒரு வீடு, மொத்த படத்தையும் சிறிதும் போர் அடிக்காமல் நகர்த்த செம சாமர்த்தியம் வேண்டும். அதை அலாட்டாக செய்து ஜெயித்தார்கள்.

வில்லனுக்கு ஒரு பிரத்தேக குணமுண்டு. தன் வீட்டிற்கு எதிரியே வந்தாலும், நன்கு உபசரித்து வாயார புகழுமாறு உபசரிப்பார். வீட்டின் வாசப்படியை தாண்டியவுடன் தான் அருவாளை எடுப்பார். இதை ஹீரோ தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் அடிக்கும் கூத்துக்கள் தான் முழுப்படமே.


தான் இத்தனை வருடம் காத்திருப்பது நம் வீட்டில் இருப்பருக்கு தான் என வில்லனுக்கு தெரிந்தபின், இந்த இருவர் விளையாடும் Cat and Mouse விளையாட்டே முழுப்படமும். இதில் ஹீரோ வெளியேறாமல் இருக்க செய்யும் சேட்டைகள், அதனால் வில்லன் பெண் தன்னுடன் காதல், அதில் ஏற்படும் கலாட்டா, விடாப்பிடியா வீட்டின் உள்ளேயே சாக்கு போக்கு சொல்லி தங்கும் ஹீரோவின் சாமர்த்தியம், வில்லன், வில்லனின் மகன்கள் இவரை வெளியே செல்ல வைக்கும் செயல்கள் என அனைத்தும் செம காமெடி. ஒரு முழுநீல ஆக்‌ஷன் பட ஸ்கோப் இருந்தும் அதை அப்படியே உல்டா செய்து ஜெயித்த படம்.

அனைவரின் நடிப்பும் அவ்வளவு அருமை. குறிப்பாக அந்த வயதான வில்லன் தான் என்னை மிகவும் கவர்ந்தவர். என்னா ஒரு மாடுலேஷன், பாடி லேங்குவேஜ், சூப்பர் நடிப்பு.....இப்படம் ஆந்திர அரசின் (2010) சிறந்த பொழுதுபோக்கு படமாகவும், சிறந்த வில்லன் நடிப்பிற்கும், சிறந்த பாடகர், சிறப்பு நடுவர் விருது என நான்கு விருதுகளை அள்ளியது.

நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். கண்டிப்பாக பாருங்கள்.

வியாழன், 6 டிசம்பர், 2012

Indian Rupee - Malayalam Moview Review

எனது பார்வையில் இந்தியன் ரூபீ - மலையாள படம்

நமது நாட்டில் கொடிக்கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் தொழிலை பின்பிலமாக கொண்ட படம். 

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இதை கதைக்களமாக கொண்டு ஒரு முழுப்படத்தை எடுக்க முடியுமா? நினைத்து பார்த்தால், மலைப்பே மிஞ்சும். இதை வெற்றியாக்கியதில் தான் இயக்குனரின் சாமர்த்தியம், திறமையுள்ளது. வெறும் வெற்றியோடு நில்லாமல், அந்த ஆண்டிற்கான கேரள அரசின் சிறந்த நடிகரின் விருது பிரித்விராஜ்க்கும், பிராந்திய மொழிப் பிரிவில் தேசிய விருதும் பெற்றத்தந்த அருமையான படம்.


மிகவும் எதார்த்தமான நேர்த்தியான திரைக்கதை. ஸ்கூல் டிராப்-அவுடான பிரித்விராஜூம் அவர் நண்பரும் கோழிக்கோட்டில் ஒரு பெரும் ரியல் எஸ்டேட்டின் சப்-பிரோக்கராக இருப்பவர்கள். நாமும் வெகுவிரைவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபராக ஆவோம் என பெரும் கனவுகளுடன் இருக்கும் நம்மை போல ஒரு சராசரி இளைஞன். ஆனால் நிஜத்தில் சிங்கிள் டீக்கு லாட்டரி அடிக்கும் ஆள்.

ஒரு திணிக்கப்பட்ட காட்சி, டிவிஸ்டும் இல்லாத படம். தெளிந்த நீரோடையாக அதன் போக்கிலேயே பயனிக்கும் திரைக்கதை. சிறு பிரோக்கர்கள் சந்த்திக்கும் தொழில் போட்டி, அவ்வூரில் இருக்கும் பெரும் முதலையுடன் நடக்கும் உள்குத்துக்கள், அவர்களை மீறி ஏதும் செய்ய முடியா இயலாமை, அவர்களின் ஆதிக்கம் என நாம் நிஜத்தில் பார்க்கும் அத்தனை விஷயமும் அச்சுஅசலாக நம் கண்முன்னே விரிகிறது.  நிச்சயம், அட ஆமாம்ல என போட வைக்கும்.

திலகன், இவர்களிடத்தில் தன் சொத்தை விற்க அணுகும்போது படம் சூடுப்பிடிக்கிறது. தன்னுடைய நிலம், கடைசி நேர சட்டசிக்களால் விற்க முடியாமல் போனாலும், இவர்களுடன் ஏற்படும் நட்பால் பிரித்விராஜுடனே தங்குகிறார். மேலும் திலகன் தரும் டிப்ஸ்களால், இவர்கள் தொழிலில் அடையும் முன்னேற்றம் என அத்தனையும் சுவாரஸ்யம். 



வித்தியாசமான குணம் கொண்ட ஜெகதி ஷாப்பிங் மால் கட்டி விற்பவர். அவரிடம் ஷாப்பிங் மாலை தனக்கென (பவர்) வாங்கி, கைமாற்றி காசு பார்க்க துடிக்கும் துடிப்பும், அதற்கான தான் மற்றும் தன் கூட்டாளி,  திலகன் மேற்கொள்ளும் யுத்திகளும் தான் படம்.

நான் இந்த படம் பார்த்து ஏறக்குறைய 3-4 மாதங்களாகிவிட்டது. இன்னும் என்னில் அதன் தாக்கும் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். குறிப்பாக இறுதியில் வரும் டிவிஸ்ட்கள் அருமையோ அருமை. அவ்வளவு இயல்பாக கதையில் பொருந்துகிறது. அது என்னவென்று சொன்னால் சுவாரஸ்யம் போய்விடுமாதலால் கூறவில்லை. நீங்களே கண்டு மகுழுங்கள்.

வர வர திலகன் மேல் தீரா காதல் வந்துவிடும் போல எனக்கு. என்னா ஒரு பிறவி நடிகன்யா...!!!! நாம் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவரைப்பற்றி சொல்லும்போதே ஒரு பூரிப்படைகிறேன். வர்ணிக்க வார்த்தையே இல்லை. சிவாஜியை அசால்ட்டா தூக்கி ஏப்பம் விட்டிருவார் மனுஷன்...!! ஒரு துளிக்கூட நடிக்கிறார் என்று நாம் உணரவே மாட்டோம், அப்படியான ஒரு திறமை. இவர் மறைந்தாலும், இவர் புகழ் என்றும் அழியப்போவதில்லை.


 கண்டிப்பாக பாருங்கள் என பரிந்துரைக்கிறேன். படத்தின் இறுதியில் நீங்களும், இதன் நிதர்சனத்தை உணர்வீர்கள். ஏன் இப்படி ஒரு கிளைமாக்ஸ் என்பதை மனதார ஒத்துக்கொள்வீர்கள்.